நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் 15 வயது சிறுமிகள் இருவருக்குப் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த இருவரை வேளாங்கண்ணி போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 வயது சிறுமிகள் இருவர், வீட்டில் ஏற்பட்ட கோபம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். இரவு நேரத்தில் வேளாங்கண்ணி கடற்கரையில் தனியாக நின்றிருந்த சிறுமிகள் இருவரிடமும் அறிமுகமான கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள், ஆசைவார்த்தைகள் கூறி அவர்களைத் தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
வேளாங்கண்ணிக்கு ஆன்மிக சுற்றுலாவின் போது வெறிச்செயல்
கேரள மாநிலத்தில் இருந்து 15 பேர் கொண்ட குழுவினர் வேளாங்கண்ணிக்குச் சுற்றுலா வந்திருந்த நிலையில் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த இருவர், சிறுமிகளைத் தனியார் விடுதியில் தங்கவைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.இதற்கிடையே, விடுதியிலிருந்து சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் வேளாங்கண்ணி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் சிறுமிகள் இருவரையும் மீட்டனர்.
2 நாட்களாக சிறுமிகளுக்கு வன்கொடுமை
2 சிறுமிகள் வன்கொடுமை தொடர்பாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆண்டனி மகன் அஜய் (26), அலெக்சாண்டர் மகன் விஷால்(23) ஆகிய இருவரையும் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரையும் மீட்ட போலீஸார், அவர்களை நாகையில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
வேளாங்கண்ணியில் சுற்றுலா வந்த இடத்தில் சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
