வேளாண் சந்தைப்படுத்தலில் பல சிக்கல்கள்: விவசாயிகள் பிரச்னை குறித்து மக்களவையில் வைத்திலிங்கம் எம்.பி கேள்வி

புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வெ. வைத்திலிங்கம் மக்களவையில், வேளாண் சந்தைப்படுத்தல் அமைப்புகளில் நிலவும் செயல்திறன் குறைபாடுகள் மற்றும் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், சந்தை அணுகல், நேரடி விற்பனை, போட்டித்தன்மை வாய்ந்த விலை நிர்ணயம், அறுவடைக்குப் பிந்தைய சேமிப்பு, தளவாடம் மற்றும் பதப்படுத்தும் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், சமீபத்திய கொள்கை நடவடிக்கைகளின் தாக்கம் மற்றும் பருவநிலைச் சவால்களை எதிர்கொள்ளும் நீண்டகால உத்திகள் குறித்தும் அவர் வினாக்களை எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் ராம்நாத் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், வேளாண் சந்தைப்படுத்தல் என்பது மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குட்பட்ட பொருளாகும். இருப்பினும், சந்தை அமைப்புகளை வலுப்படுத்தவும், விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்யவும், கொள்கை நடவடிக்கை மற்றும் பல்வேறு திட்டங்கள் வாயிலாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது.

அகில இந்திய மின்னணு வர்த்தக தளமான ‘தேசிய வேளாண் சந்தை’ (e-NAM) நாடு முழுவதும் உள்ள வேளாண் விளைபொருள் சந்தை குழுக்கள் மெய்நிகர் முறையில் ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் வெளிப்படையான இணையவழி ஏலம், சிறந்த விலை நிர்ணயம் மற்றும் விற்பனைத் தொகை வங்கியில வைப்பு செய்யப்படுகிறது. 2026 ஜூன் 30 நிலவரப்படி 1.89 கோடி விவசாயிகளும், 2.78 லட்சம் வணிகர்களும் இதில் பதிவு செய்துள்ளனர். 2018-19ம் ஆண்டில் 563 மெட்ரிக் டன்னாக (₹37 லட்சம்) இருந்த வர்த்தகம், 2025-26ஆம் ஆண்டில் 2,984.3 மெட்ரிக் டன்னாக (₹14.28 கோடி) உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தமாக ₹83.95 கோடி மதிப்பில் 28,566 மெட்ரிக் டன் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. ஏலத் தொகுப்பில் பங்கேற்கும் வணிகர்களின் சராசரி எண்ணிக்கை 2016-17ல் 2.1 ஆக இருந்து, 2025-26ல் 2.8 ஆக உயர்ந்துள்ளதால் போட்டித்தன்மை அதிகரித்து உள்ளது.

10,000 FPO-க்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 10,000 விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  2020-ல் இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, இவ்வமைப்புகளின் மொத்த வர்த்தக மதிப்பு ₹20,340 கோடியைத் தாண்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 369.18 லட்சம் மெட்ரிக் டன் சேமிப்புத் திறன் கொண்ட 12,353 சேமிப்புக் கிடங்கு திட்டங்களுக்கும், 6,901 சேமிப்புக் கிடங்கு அல்லாத உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 18,893 கிடங்குகள், 3,110 குளிர்சாதனக் கிடங்குகள் மற்றும் குளிர்சங்கிலித் திட்டங்கள், 2,105 முதன்மை மற்றும் இரண்டாம் நிலை ஒருங்கிணைந்த பதப்படுத்தும் அலகுகளுக்கு வட்டி மானிய ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

பேக் ஹவுஸ்கள், குளிர்சாதன வாகனங்கள், பழம் பழுக்க வைக்கும் அறைகள் உள்ளிட்ட சுமார் 1.76 லட்சம் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டன. பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனா 2026 ஜூன் 30 நிலவரப்படி 1,256 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டு செயல்பாட்டில் உள்ளன; இதன் மூலம் சுமார் 37.76 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். கூட்டுறவு அமைச்சகத்தின் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டத்தின் கீழ், 313 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் 1.80 லட்சம் மெட்ரிக் டன் சேமிப்புத் திறன் கொண்ட கிடங்குகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

நீதி ஆயோக் 2020 மற்றும் 2025ம் ஆண்டுகளில் வெளியிட்ட அறிக்கைகளின்படி, ஒருங்கிணைந்த வேளாண் சந்தைப்படுத்தல் திட்டம் போட்டித் தன்மை வாய்ந்த சந்தைகளையும் விவசாயிகளுக்கு சிறந்த விலையையும் உறுதிசெய்தது. திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்புகள் 60% அதிகமான பயனாளிகள் பயன்படுத்தி, தங்கள் விளைபொருட்களின் சந்தை மதிப்பை உயர்த்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை மாநிலப் பட்டியலின் கீழ் இருந்தாலும், பயிர்க் காப்பீடு, கடன் வசதி, டிஜிட்டல் வேளாண்மை, இயற்கை விவசாயம் மற்றும் பாசன வசதிகள் உள்ளிட்ட பல திட்டங்கள் மூலம் மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து துணை நின்று வருகிறது என அமைச்சர் ராம்நாத் தாக்கூர் பதிலளித்துள்ளார்.

செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

Source link