சீமைக் கருவேல மரத்தின் வேர்கள் பூமிக்கு அடியில் மிக ஆழமாக சுமார் 50 முதல் 100 அடிகள் வரை சென்று நிலத்தடி நீரை அசுர வேகத்தில் உறிஞ்சக்கூடியவை. இதனால் சுற்றியுள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள நீர்மட்டம் மிக வேகமாக வறண்டு போகிறது. இயற்கை வளத்திற்கு சாபமாக விளங்கும் இதனை அகற்ற வேண்டும் என்று பலரும் பல ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றனர்.
கருவேல மரங்களை தமிழகத்தில் இருந்து அகற்ற வலியுறுத்தி பல்வேறு சூழல்களில் வைகோவும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பொதுநல வழக்குகளை தொடர்ந்தது என பல முன்னெடுப்புக்களை வைகோ மேற்கொண்டுள்ளார். குறிப்பாக, தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் ஆகியவற்றை பாதிப்புக்குள்ளாக்கி, மனித குலத்திற்கும் கால்நடைகளுக்கும் கேடு விளைவிக்கும் சீமைக்கருவேல மரங்களை வேரோடு பிடுங்கி அழிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இது வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் பல காலங்களாக நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு வாயிதாக்களை, விசாரணைகளை, ஆய்வுகளை, உத்தரவுகளை, இடைக்கால தடை என பல நிலைகளை தாண்டி நடைபெற்று வருகிறது. அதன்பிறகு, கடந்த 2015-ம் ஆண்டு முதல் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்த போதிலும் அந்த உத்தரவுகள் இதுவரையில் அமல்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. அந்த உத்தரவு தொடர்பாக பல்வேறு கட்டங்களாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (24-07-26) வந்தது. அப்போது வைகோ நேரில் ஆஜராகி, ‘விவசாயிகள், சுற்றுசூழல் ஆர்வலர்களுடன் இணைந்து தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் சீமை கருவேல மரங்களை அகற்றி இருக்கிறேன். அப்படி அகற்றும் போது இந்த மரங்களில் இருந்து வெளியான வாயு காரணமாக என்னுடைய தொண்டை மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் சில இடங்களில் வருவாய் துறை அதிகாரிகள் இந்த மரங்களை அகற்றுவதற்கு ஆட்சேபனை தெரிவிக்கின்றனர். அதனால் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தேன். மாவட்ட ஆட்சியருடைய தலையீட்டுக்குப் பிறகு தான் அனுமதி வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் கூட உயர் நீதிமன்றத்தினுடைய உத்தரவு நிறைவேற்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் அந்த உத்தரவு தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவிட வேண்டும். மேலும் இந்த மரங்களை அகற்றுவதற்கான அனுமதி கேட்பவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை முன்வைத்தார்.
அதன் பின்னர் அரசு தரப்பின் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டதாவது, ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 90% மரங்கள் அகற்றப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் போதுமான அளவு முன்னேற்றம் இருக்கிறது. வட மாவட்டங்களில் தான் கொஞ்சம் சுணக்கம் இருக்கிறது’ எனத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘நீதிமன்றம் நியமித்த நீதிபதிகளிடம் அரசுத்துறை செயலாளர்கள் எந்த ஒரு கூட்டத்தையும் நடத்தவில்லை. சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான உத்தரவை அமல்படுத்தும் வகையில் வருவாய் செயலாளரை நோடல் அதிகாரியாக நியமிக்கிறோம். வரும் 31ஆம் தேதி இந்த வருவாய் செயலாளர் நேரில் ஆஜராகி என்னென்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்கிற விவரங்களை ஆலோசனைகளாக வழங்க வேண்டும். மேலும் சீமை கருவேல மரங்களை அகற்ற தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும். சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு அனுமதி கேட்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் வருவாய்த்துறை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும். மேலும் வைகோவை பின்பற்றி இந்த மரங்களை அகற்றுவதற்கு தன்னார்வலர்கள் நேரில் களமிறங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
