மாட்ரிட்: ஸ்பெயினின் மத்திய பகுதியில், நின்று கொண்டிருந்த ரயில் மீது விரைவு ரயில் ஒன்று மோதியதில் 46 பேர் உயிரிழந்ததாகவும், 179 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
தலைநகர் மாட்ரிட்டில் இருந்து தென்மேற்கு ஸ்பெயினில் உள்ள செவில்லியை நோக்கி ஒரே திசையில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்றுள்ளன. முன்னால் சென்ற ரயில், உர்டா நகருக்கு அருகில் நின்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ரயில் மோதி உள்ளது.
இதில், குறைந்தது 30 பேர் உயிரிழந்ததாக ஸ்பெயின் அரசு செய்தி நிறுவனமான EFE தெரிவித்துள்ளது. எனினும், 46 பேர் உயிரிழந்ததாகவும், 179 பேர் காயமடைந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு நிறுவனமான RENFE-க்கு சொந்தமான ரயில், IRYO என்ற தனியார் நிறுவன ரயில் மீது மோதி உள்ளது. இதில், ஒரு ரயில் பெட்டி முற்றிலும் சிதைந்து உலோகத் துண்டுகளாக காட்சியளிக்கின்றன. மேலும், இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காஸ்டிலா லா மன்சா பிராந்திய செய்தித் தொடர்பாளர் எஸ்தர் படில்லா கூறுகையில், “ஒரே திசையில் சென்றுகொண்டிருந்த இரண்டு அதிவேக ரயில்களுக்கு இடையே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நின்றுகொண்டிருந்த ஒரு ரயிலின் பின்புறத்தில் மற்றொரு ரயில் மோதியதில் அதன் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
காயமடைந்தவர்களையும் இறந்தவர்களின் உடல்களையும் மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அப்பகுதியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அதிவேகத்தில் நிகழ்ந்த மோதல் என்பதால், இது ஒரு பெரும் துயரமான சம்பவமாக இருக்கும் என்று அஞ்சுகிறோம். விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இதே நிறுவனங்களுக்குச் சொந்தமான ரயில்களுக்கு இடையே கடந்த ஜனவரி மாதமும் கொடிய விபத்து ஏற்பட்டது. அப்போது, RENFE-க்கு சொந்தமான ரயிலில் 397 பயணிகளும், IRYO நிறுவனத்துக்குச் சொந்தமான ரயிலில் 147 பயணிகளும் பயணித்தனர்” என தெரிவித்தார்.
ஸ்பெயின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான TVE-யிடம் பேசிய உர்தா நகர மேயர் மானுவல் கலான், “காயமடைந்த பயணிகளை கவனித்துக்கொள்ள ஒரு விளையாட்டு அரங்கத்தை தயார் செய்யுமாறு குடிமை பாதுகாப்பு அதிகாரிகள், எங்கள் நகராட்சி நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் அவசரகால சேவைகளில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினருக்கு உதவ, ராணுவத்தின் அவசரகால படைப்பிரிவு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இந்த தீவிரமான ரயில் விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவ அவசரகால சேவைப் பணியாளர்கள் விபத்து நடந்த இடத்தில் பணியாற்றி வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்’ என தெரிவித்துள்ளார்.
