நமது நிருபர்
ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், பிரான்சில் காட்டுத்தீயின் கோரத்தாண்டவத்திற்கு, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு தீயில் கருகிய நிலையில், இரண்டு லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய கண்டத்தில் கடந்த மே மாதம் முதல் வரலாறு காணாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. கடும் வெப்பம் மற்றும் வலுவான காற்றின் காரணமாக ஆங்காங்கே காட்டுத் தீப்பற்றி பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் பற்றிய காட்டுத்தீயில், 25,000 ஏக்கர் நிலப்பரப்பும், அண்டை மாகாணமான ஆவிலாவில், 37,000 ஏக்கர் நிலப்பரப்பும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன. இதேபோன்று பிரான்சின் புகழ்பெற்ற திராட்சைத் தோட்டங்களும், சுற்றுலா மையங்களும் கொண்ட போர்டோ நகரைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ளது.
காட்டுத்தீ அச்சத்தால், இரு நாட்டிலும், இரண்டு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இரு நாடுகளிலும் தீயணைப்பு வீரர்கள், ராணுவம், ஹெலிகாப்டர்கள், நீர் தெளிக்கும் விமானங்கள் உதவியுடன் தீயை அணைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஸ்பெயின் தேசிய அவசர நிலையை அறிவித்துள்ள நிலையில், பிரான்ஸ் சர்வதேச உதவியை கோரியுள்ளது.
