ஸ்ரீபெரும்புதுார்: விபத்தில் சிக்கி காயமடைந்த நபருக்கு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளரான எலக்ட்ரீஷியன் சிகிச்சையளித்தது விவாதத்தை கிளப்பிய நிலையில், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம், கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த திலகர், கடந்த 18ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதே பகுதியில் விழுந்து காயமடைந்தார்.
இதையடுத்து அவர், சிகிச்சைக்காக, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவமனையின் ஒப்பந்த பணியாளரான எலக்ட்ரீஷியன் விக்னேஷ் என்பவர் சிகிச்சை அளித்துள்ளார்.
இது, நோயாளிகள் மற்றும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, பெரும் விவாதத்தையும் கிளப்பியது.
இது குறித்து ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் ஜெயபாரதி கூறியதாவது:
விபத்தில் சிக்கிய திலகரும், மருத்துவமனை எலக்ட்ரீஷியனான விக்னேஷும் நண்பர்கள். சம்பவ நாளன்று, பணியில் இருந்த மருத்துவர்கள், மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தனர்.
அதனால் விக்னேஷ், தன் நண்பர் என்பதால் தாமே முன்வந்து திலகருக்கு சிகிச்சை அளித்துள்ளார். இச்சம்பவம் தெரிந்ததும், நேற்று முன்தினம் விக்னேஷ் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த மருத்துவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதே மருத்துவமனையில் கடந்தாண்டு, அவசர கிசிச்சை பிரிவில் மருத்துவ உதவியாளர் இளையராஜா, அங்கு அமர்ந்து மது அருந்தியது பிரச்னையானது.
