“ஸ்ரீராமர் ஒருபோதும் அறநெறியைக் கைவிடவில்லை” – பிரதமர் மோடி பேச்சு!

விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் உள்ள டிடிஏ உற்சவ மைதானத்தில் தசரா பண்டிகை இன்று (20-10-26) நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, பாரம்பரிய முறைப்படி வில்லில் இருந்து அம்பை எய்து ராவணனின் உருவ பொம்மையை எரித்து விழாவைச் சிறப்பித்தார்.

அதனை தொடர்ந்து இந்த விழாவில் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “விஜயதசமி எனும் இந்த புனிதமான தருணத்தில், பகவான் ஸ்ரீராமர், அன்னை ஜானகி மற்றும் பஜ்ரங்பலி ஆகியோரின் பாதங்களில் நான் வணங்குகிறேன். இந்த புனிதமான சூழலில், எனது சக குடிமக்கள் அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களைப் பொறுத்தவரை, இவை வெறும் பண்டிகைகள் மட்டுமல்ல; இவை இந்தியாவின் உயிர்ச்சக்தியாகும். ராம ராஜ்ஜியம் என்பது, எவர் மீதும் பாகுபாடு காட்டப்படாத, அனைவருக்கும் நீதி கிடைக்கக்கூடிய, சம வாய்ப்புகள் கொண்ட, அதிகாரம் ஆகும். இதுவே பகவான் ஸ்ரீ ராமரின் இலட்சியமாகும்.

இந்த நாடும், அதன் கலாச்சாரமும், அதன் முன்னோர்களும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பகவான் ஸ்ரீ ராமரை வழிபட்டு வந்துள்ளனர். இந்த நம்பிக்கை, ஸ்ரீ ராமர் அரக்க மன்னனான ராவணனை வென்றார் என்பதற்காக மட்டுமல்ல, மனித வரலாற்றிலேயே ஈடு இணையற்ற விழுமியங்களை பகவான் ராமர் நமக்கு வழங்கியதே ஆகும். பகவான் ஸ்ரீ ராமர் தனது வாழ்க்கையில் பல இன்னல்களைச் சந்தித்த போதிலும், அவர் ஒருபோதும் சத்தியத்தின் பாதையையும் அறநெறியையும் கைவிடவில்லை.

ஒரு தேசம் சுயமரியாதை உணர்வைக் கொண்டிருக்கும்போதுதான் அது முன்னேறுகிறது; அந்தச் சுயமரியாதையை வடிவமைப்பதில் அதன் பாரம்பரியம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால்தான், நமது பாரம்பரியத்தையும் அடையாளத்தையும் பாதுகாக்கும் பணியில் நாடு தற்போது ஈடுபட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக, நமது பாரம்பரியச் சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. ஆனால் இன்று, அந்தப் பொக்கிஷங்களை நாம் மீண்டும் தாயகத்திற்குக் கொண்டு வந்து கொண்டிருக்கிறோம்

நமது சிந்தனைகள் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும். நாட்டின் அனைத்து நிறுவனங்களும், அனைத்து அரசியல் கட்சிகளும், தேசிய நலனுக்காக ஒன்றிணைந்து நிற்க வேண்டும். நாம் இந்த உணர்வுடனேயே முன்னேற வேண்டும். நாட்டின் எதிரிகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். சமூகத்தைப் பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறினார்.