ஹர்மன்பிரீத் கவுர் ‘சூறாவளி’: இந்தியாவுக்கு இமாலய வெற்றி

ராய்ப்பூர்: மூன்றாவது ‘டி–20’ போட்டியில் இந்திய அணி 92 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. தொடரை 3–0 என முழுமையாக வென்று, கோப்பை கைப்பற்றியது. ஹர்மன்பிரீத் கவுர் 41 பந்தில் 91* ரன் விளாசி, வெற்றிக்கு கைகொடுத்தார்.

இந்தியா வந்த ஜிம்பாப்வே பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் இந்தியா வென்றது. நேற்று, ராய்ப்பூரில் (சத்தீஸ்கர்) உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் 3வது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் ஸ்மிருதி ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

25 பந்தில் அரைசதம்

இந்திய அணிக்கு துணை கேப்டன் ஷபாலி வர்மா, அனுஷ்கா சர்மா வலுவான துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்த நிலையில், அனுஷ்கா (28) வெளியேறினார். நிக்கி பிரசாத் (9) நிலைக்கவில்லை. அதிரடியாக ஆடிய ஷபாலி, சர்வதேச ‘டி–20’ அரங்கில் 23வது அரைசதம் எட்டினார். பிசா ஓவரில் ஷபாலி (6, 4), சிகோரா ஓவரில் ஹர்மன்பிரீத் கவுர் (4, 6, 4, 6) அடித்து நொறுக்க, ‘ஸ்கோர்’ படுவேகமாக உயர்ந்தது. ஷபாலி வர்மா 69 ரன்னுக்கு (37 பந்து, 6×4, 5×6) அவுட்டானார். சிபாண்டா ஓவரில் 3 பவுண்டரி அடித்த, ஹர்மன்பிரீத் கவுர், சர்தேச ‘டி–20’ அரங்கில் 19வது அரைசதம் (25 பந்தில்) எட்டினார்.

ரிச்சா கோஷ் (1), தீப்தி சர்மா (0), அருந்ததி ரெட்டி (4), பிரேமா ராவத் (4) தாக்குப்பிடிக்கவில்லை. ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுபக்கம் ஹர்மன்பிரீத் அசத்த, இந்தியா 200 ரன்னை கடந்தது. இந்திய அணி 20 ஓவரில் 216/7 ரன் குவித்தது. சதத்தை நழுவவிட்ட ஹர்மன்பிரீத் கவுர் (91 ரன், 41 பந்து, 10×5, 5×6) அவுட்டாகாமல் இருந்தார்.

ஜிம்பாப்வே அணிக்கு மேயர்ஸ் (60), பிசா (44) ஆறுதல் அளித்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 20 ஓவரில் 124/7 ரன் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற இந்தியா சார்பில் நந்தினி சர்மா அதிகபட்சமாக 3 விக்கெட் சாய்த்தார்.

Source link