10 தேசிய விருதுகளை குவித்த தமிழ் திரைப்படங்கள் : விஜய் வாழ்த்து

72-வது தேசிய திரைப்பட விருதுகள், டெல்லியில் நேற்று (ஜூலை 18) அறிவிக்கப்பட்டது. 2024 ஜனவரி 1 முதல், டிசம்பர் 31, 2024 வரை மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மூலம் சான்றிதழ் பெற்ற திரைப்படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டது. திரைப்பட இயக்குனர் ஜெயராஜ் தலைமையில் 11 உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு இந்த விருது தேர்வு பட்டியலை தயாரித்துள்ளது. 

டிஸ்னிலேண்ட் ஃபாரின்ல இல்ல; இந்தியாவில் தான் இருக்கு… எங்க இருக்கு தெரியுமா?

தமிழ் சினிமாவில் ‘மெய்யழகன்’, ‘கேப்டன் மில்லர்’, ‘ராயன்’, ‘அமரன்’, ‘மகாராஜா’ ஆகிய படங்கள் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளன. இந்நிலையில், தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ள தமிழ்த் திரையுலக கலைஞர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “2024-ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள “ராயன்” திரைப்படத்திற்குச் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதும், “கேப்டன் மில்லர்” திரைப்படத்திற்குத் தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருது மற்றும் அப்படத்தில் நடித்த தனுஷிற்கு சிறப்புப் பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதும், “அமரன்” திரைப்படத்திற்காக ராஜ்குமார் பெரியசாமிக்கு சிறந்த இயக்குநருக்கான விருது, ஆர். கலைவாணனுக்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருது மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “மகாராஜா” திரைப்படத்திற்காக அனல் அரசுக்கு சிறந்த சண்டைப்பயிற்சிக்கான விருது மற்றும் அப்படத்தில் நடித்த சச்சனா நமிதாஸுக்கு சிறந்த துணை நடிகை விருதும், “மெய்யழகன்” திரைப்படத்திற்காக சுரேன் ஜி-க்கு சிறப்புப் பிரிவில் சிறந்த ஒளிக்கலவைக்கான விருதும், “ப்ளூ” குறும்படத்திற்காக டி. எஸ். ஹரிஹர சுதனுக்கு சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10 தேசிய திரைப்பட விருதுகளைத் தமிழ்த் திரையுலகம் வென்றுள்ளதைப் பெருமைக்குரியதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், வருங்காலங்களில் தமிழ்த் திரையுலகம் மேலும் பல விருதுகளைப் பெற்றிடவும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



Source link