நமது நிருபர்
இந்தியாவில் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்புடைய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை சோதனை முறையில் புழக்கத்தில் விட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் ரூபாய் நோட்டு பயன்பாடு துவங்கிய காலத்தில் இருந்தே பேப்பரில் அச்சடிக்கபப்ட்ட தாள்களை தான் பயன்படுத்தி வருகிறோம். தற்போது முதல்முறையாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வர இருக்கின்றன. முதற்கட்டமாக 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்புடைய பிளாஸ்டிக் நோட்டு பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன.
சோதனை அடிப்படையில் வெளியிடும் ரிசர்வ் வங்கியின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஒவ்வொன்றும் 100 கோடி எண்ணிக்கையில், 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி ஏற்பாடு செய்துள்ளது. இத்திட்டத்தில் வெற்றி பெற்றால், அதிகமான பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு அறிமுகப்படுத்தப்படலாம். மேலும், இவை காகிதப் பணத்தை விட அதிக காலம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காகித நோட்டுகள் திரும்பப் பெறப்படாது என்றும், பிளாஸ்டிக் மற்றும் காகிதப் பணம் இரண்டும் ஒன்றாகவே புழக்கத்தில் இருக்கும் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. காகித நோட்டுகளை முழுமையாக மாற்றுவதற்கான எந்தவொரு திட்டமும் இல்லாமல், இந்தத் திட்டம் தற்போது ஆரம்பகட்ட நிலையில் உள்ளது. பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் எளிதில் சேதமடையாது. இதன் மூலம் ரூபாய் நோட்டுகளை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது என்று இந்த முடிவை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது.
