பீகார் மாநிலத்தில் காதலியை பைக்கில் இழுத்துச் சென்ற இளைஞரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்திய காதலியை சுமார் 100 மீட்டர் தூரம் சாலையில் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் நவாடா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அரசு அளவையராக பணியாற்றி வருகிறார். அவரும் ஒரு இளம்பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், அண்மைக் காலமாக அந்த இளைஞர் தனிப்பட்ட காரணங்களால் அந்த பெண்ணை புறக்கணித்து வந்துள்ளார்.
இதனால் அந்த இளைஞரை நேரில் சந்தித்த இளம்பெண், நாலந்தா மாவட்டம் ராஜ்கிர் பகுதியில் உள்ள வேணுவன் அருகே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததுடன், அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்ல முயன்றுள்ளார். காதலன் தப்பிச் செல்லாமல் தடுக்க இளம்பெண் பைக்கின் பின்புற கேரியர் மற்றும் கைப்பிடியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார். இருந்தபோதிலும், இளைஞர் பைக்கின் வேகத்தை அதிகரித்ததால், பிடியை விடாமல் இருந்த அந்த பெண் சுமார் 100 மீட்டர் தூரம் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். இதைக் கண்ட பொதுமக்கள் ஆத்திரமடைந்து, இளைஞரை பிடித்து தாக்கிய பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: உயரத்துல நிற்கும் போது கால் நடுங்குதா..? ஆபத்தான அறிகுறியா..? உண்மை காரணம் என்ன..?
