தேனி: தேனி மாவட்ட சிறையில் இருந்து 15 கைதிகள் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்ட சிறை ஆண்டிபட்டி தாலுகா தேக்கம்பட்டி அருகே உள்ளது. இந்த சிறையில் 4 பிளாக்குகள் உள்ளன. நேற்றிரவு 3ம் பிளாக்கில் ஒரு கைதிக்கு வலிப்பு வந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து சிறப்பு எஸ்.ஐ., மதன்மோகன் பிளாக்கை திறந்தார். அப்போது அங்கிருந்த கைதிகள் அவரை தாக்கி வெளியே வந்தனர். கதவு அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் தங்கபாண்டியை ஆயுதங்களால் தாக்கிவிட்டு சிறையில் இருந்து தப்பினர்.
காயமடைந்த மதன்மோகன், தங்கபாண்டி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து சிறையில் இருந்து 10 கி.மீ., சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போலீசார், மாவட்டம் முழுவதும் ரோந்து பணியை தீவிரப்படுத்தி தப்பிய கைதிகளை தேடுகின்றனர். மலைப்பகுதிகளிலும் தீவிர சோதனை நடக்கிறது.
