புதுடில்லி: பண மோசடி வழக்கில் சிக்கி, 2010ல் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு தப்பிச் சென்ற, ஐ.பி.எல்., எனப்படும், இந்தியன் பிரீமியர் லீக் டி – 20 கிரிக்கெட் தொடரின் நிறுவனரும், அதன் முன்னாள் தலைவருமான லலித் மோடி, 62, வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்ததை அடுத்து, 16 ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்ப உள்ளதாக அறிவித்துள்ளார்.
ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் உருவாவதற்கு காரணமானவர் தொழிலதிபர் லலித் மோடி. அதன் தலைவராக செயல்பட்ட அவர், 2009ல், லோக்சபா தேர்தலை காரணம் காட்டி, தென் ஆப்ரிக்காவில் கிரிக்கெட் தொடரை நடத்தினார். ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி, வெளிநாட்டிற்கு அன்னிய செலாவணி பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி, லலித் மோடி உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிந்தது.
இதற்கிடையே, 2010ல் நாட்டை விட்டு தப்பிச் சென்ற லலித் மோடி, லண்டனில் தஞ்மடைந்தார். இந்த முறைகேட்டை அடுத்து, பி.சி.சி.ஐ., எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், 2013-ல் அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது.
இந்த அன்னிய செலாவணி வழக்கின் விசாரணை, கடத்தல்காரர்கள் மற்றும் வெளிநாட்டு பண மோசடி செய்பவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் சட்டத்தின் கீழ் இயங்கும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த தீர்ப்பாயம், அமலாக்கத் துறையின் அபராதங்களை ரத்து செய்ததுடன், இந்த விவகாரத்தில் லலித் மோடியின் பொறுப்பை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை என, குறிப்பிட்டது.
தீர்ப்பு குறித்து, லலித் மோடி கூறியதாவது:
இது, 16 ஆண்டு கால என் சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. ஊடகங்களிடமும், அனைவரிடமும் நான் கூறிவந்தவை தற்போது உண்மை என, நிரூபிக்கப்பட்டு விட்டது. ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் நலனுக்காகவே எப்போதும் செயல்பட்டேன். ஆனால் என் மீது வீண்பழி சுமத்தி விட்டனர். தற்போது இந்தியா திரும்புவதை எதிர்நோக்கி உள்ளேன். இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ இந்தியா வருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
