தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவத்தின் எதிரொலியாக, சிறை மற்றும் சீர்திருத்தச் பணிகள் துறை டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக கூடுதல் டி.ஜி.பி கே. சங்கர் சிறைத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சஞ்சய் மதுர் உள்ளிட்ட மேலும் பல மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேனியில் 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவத்தின் எதிரொலியாக, சிறைத் துறை டி.ஜி.பி சந்தீப்ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் காவல் துறையைச் சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலரை இடமாற்றம் செய்து உள் துறை முதன்மைச் செயலாளர் அ. கார்த்திக் உத்தரவிட்டுள்ளார்.
உள் துறை முதன்மைச் செயலாளர் அ. கார்த்திக் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சிறைத்துறை டி.ஜி.பி-யாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (டான்ஜெட்கோ TANGEDCO) தலைமை லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக அமலாக்கப் பிரிவு சி.ஐ.டி பிரிவு கூடுதல் டி.ஜி.பி கே. சங்கர், சிறை மற்றும் சீர்திருத்தச் பணிகள் துறையின் தலைவராகப் பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.ஜி.பி சஞ்சய் மதுர் ஐ.பி.எஸ் காத்திருப்போர் பட்டியலில் இருந்த நிலையில், தற்போது மாநில குற்றப் பதிவுப் பணியகத்தின் தலைவராக/டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில குற்றப் பதிவுப் பணியக ஐ.ஜி-யாக இருந்த சோனல் சந்திரா ஐ.பி.எஸ், சென்னை டி.ஜி.பி அலுவலக தலைமையக ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தாம்பரம் மாநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பள்ளிக்கரணை துணை ஆணையராக இருந்த பி. ரகுபதி ஐ.பி.எஸ், கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி) நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு (வடக்கு மண்டல) எஸ்.பி-யாக இருந்த டாக்டர் ஆர். ஸ்டாலின் ஐ.பி.எஸ், தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்ட எஸ்.பி-யாக இருந்த எஸ். அசோக் குமார் ஐ.பி.எஸ், மதுரை பயங்கரவாத எதிர்ப்புப் படையின் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
காவல்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முக்கிய பணிமாறுதல்கள் காவல்துறையின் நிர்வாக ரீதியாகப் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.
