கடந்த தி.மு.க ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாக துறையில், 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கூறி, இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யும்படி, தமிழக டி.ஜி.பி-க்கு, அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது.
இந்த கடிதத்தின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அ.தி.மு.க எம்.பி. ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய கடந்த பிப்ரவரி மாதம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, கே.என்.நேரு வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை, அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த செப்டம்பர் மாதம் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், சென்னை, திருச்சி, கோவை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் சோதனை நடத்தினர்.
திருச்சியில் கே.என்.நேரு வீட்டில் 8 மணிநேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்றது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் இல்லத்தில் 6 மணி நேரம் சோதனை நடைபெற்றது. இதில் சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
இதேபோல், திருச்சி மாவட்டம் துறையூர் தி.மு.க நகர செயலாளரும் நகர் மன்ற துணைத் தலைவருமான மெடிக்கல் முரளி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டது. நாமக்கல்லில் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ராமலிங்கம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
மோகனூர் சாலையில் உள்ள கே.என்.நேருவின் உறவினரும், ஒப்பந்ததாரருமான துரை என்பவரது வீட்டில் இருந்து சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இதேபோல், வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள அணைக்கட்டு முன்னாள் எம்.எல்.ஏ. நந்தகுமாரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அவரது வீட்டு மாடியில் உள்ள தண்ணீர் டேங்கிலும் சோதனை நடத்தினர்.
விளக்கம்
இந்த நிலையில், இந்தச் சோதனையின்போது, வழக்கு விசாரணைக்குத் தொடர்புடையதாகக் கருதப்படும் 170 ஆவணங்களும், 13 மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முன்னாள் அமைச்சர் திரு. கே.என். நேரு மற்றும் பிற 7 பேர் மீது, ஊழல் மற்றும் முறைகேடு புகாரின் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் (DVAC) தலைமையகத்தில் வழக்கு (குற்ற எண்: 02/2026) பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அமலாக்க இயக்குநரகம் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பல்வேறு பிரிவுகளில் 2538 பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ததில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தகுதியற்ற நபர்களிடமிருந்து பணம் பெறப்பட்டு, அவர்கள் உதவிப் பொறியாளர் (AE), இளநிலைப் பொறியாளர் (JE), சுகாதார ஆய்வாளர், வரைவாளர் போன்ற பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காகப் பெறப்பட்ட பணம், 2024-25 ஆம் ஆண்டில் ‘ஹவாலா’ (Hawala) பரிவர்த்தனை முறையைப் பயன்படுத்திப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, இன்று சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாமக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட 25 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது, ​​வழக்கிற்குத் தொடர்புடைய 170 முக்கிய ஆவணங்களும், 13 மின்னணு சாதனங்களும் கைப்பற்றப்பட்டன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.” என்று தெரிவித்துள்ளது.
