18 வயதுக்குட்பட்ட பெண்களிடம் பேசினாலே போக்சோவா? சர்ச்சைப் பேச்சால் ‘சிங்கப்பெண்’ அதிரடிப் படை எஸ்.எஸ்.ஐ மாற்றம்

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், “18 வயதுக்குட்பட்ட பெண்களிடம் பேசினாலே போக்சோ சட்டத்தில் சிறைக்குச் செல்வீர்கள்” எனப் பேசியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப் படை எஸ்.எஸ்.ஐ சுமதி, சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் போக்சோ சட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பெண் உதவிய ஆய்வாளர் சுமதி சிங்கப்பெண் அதிரடிப்படையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றக்களை தடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்கவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் முதலமைச்சர் விஜய், காவல்துறையில் சிங்கப்பெண் அதிரடிப்படை என்ற தனிப் பிரிவைத் தொடக்கி வைத்தார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் சிங்கப்பெண் அதிரடிப்படை பிரிவு உருவாக்கப்பட்டது.

அந்த வகையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் உட்கோட்டங்களில் தலா 4 போலீசார் கொண்ட 2 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது. இதில், அரியலூர் உட்கோட்ட படையில் சிறப்பு பாதுகாப்பு அலுவலராக பணியாற்றிய எஸ்.எஸ்.ஐ சுமதி, கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

அரியலூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.ஐ சுமதி பேசிய கருத்துக்கள் சமூக வலைதளங்களிலும் இணையத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அவர் மாணவர்களிடம் பேசுகையில், “18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந் தைகளிடம் யார் பேசினாலும், ஹாய் என குறுஞ்செய்தி அனுப்பினாலோ அல்லது அவர்களிடம் அசிங்கமாகவோ, அருவருப்பாகவோ பேசினால் போக்சோ சட்டத்தின்கீழ் சிறைக்கு செல்வீர்கள்” என்று மாணவர்களை மிரட்டும் வகையில் பேசியதாக தெரிகிறது. மேலும், இதனை அவரே வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்த பொதுமக்கள் பலரும், ’18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளிடம் பேசினாலே சிறைக்கு செல்வீர்’ என பேசியது தவறு என்று சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்தனர். 

இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் இணையத்திலும் வைரலான நிலையில், எஸ்.எஸ்.ஐ சுமதியை அரியலூர் காவல்நிலைய சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவிட்டார்.

Source link