1996 ராஜஸ்தான் பஸ் குண்டுவெடிப்பு வழக்கு முக்கிய குற்றவாளியின் மரண தண்டனை ரத்து: மீண்டும் புதிதாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி:ராஜஸ்தானில், 30 ஆண்டுகளுக்கு முன், பஸ்ஸில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. மேலும், இவ்வழக்கை மீண்டும் புதிதாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கவும் உத்தரவிட்டது.

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்து, கடந்த 1996ல் ராஜஸ்தான் மாநிலம் பிகேனர் நோக்கி சென்ற பஸ்ஸில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த கொடூர சம்பவத்தில், 14 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் கடந்த 2019ல் குற்றஞ்சாட்டப்பட்ட அப்துல் ஹமீது என்பவருக்கு மரண தண்டனையையும், பப்பு என்கிற சலீம் என்பவருக்கு ஆயுள் தண்டனையையும் உறுதி செய்தது.

இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அப்துல் ஹமீதுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்த நீதிபதிகள், ஆயுள் தண்டனை கைதி சலீமையும் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து, உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

விசாரணை நீதிமன்றத்தில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டபோது, அப்துல் ஹமீதுக்கு முறையான சட்ட உதவிகள் வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது. இதனால், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து, அப்துல் ஹமீது மீதான வழக்கை முதலில் இருந்து நடத்த வேண்டும். குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் அனுபவம் உள்ள மூத்த நீதிபதி தலைமையில், வழக்கை ஓராண்டுக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இவ்வழக்கில் விடுவிக்கப்பட்ட ஆறு பேருக்கு எதிராக ராஜஸ்தான் அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

Source link