தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷின் ரசிகர் மன்றங்கள், ‘தனுஷ் நற்பணி இயக்கம்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. மேலும், ‘தமிழக எழுச்சிக் கழகம்’ என்ற பெயரில் அவர் புதிய கட்சி தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் பரவி வரும் சூழலில், தனது அமைப்பை பலப்படுத்தும் வகையில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள செம்மஞ்சேரி தனியார் கல்லூரியில் தனுஷ் நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்பு விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 5,000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் வேஷ்டி-சட்டை அணிந்து பங்கேற்ற தனுஷ், வருகை தந்திருந்த பெண்களுக்கு சிக்கன் பிரியாணி, முட்டை மற்றும் பிரட் அல்வா அடங்கிய சுவையான விருந்தையும், பரிசாகச் சிறிய வெள்ளி காமாட்சி விளக்குகளையும் வழங்கினார்.
இச்சந்திப்பில் பங்கேற்ற பெண் நிர்வாகி அளித்த பேட்டியில், “நடிகர் தனுஷ் வெறும் 2 நிமிடங்கள் மட்டுமே பேசினார்” எனக் குறிப்பிட்டுள்ளார். உரையாடலின் போது, அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி என்றும், அனைவரும் நன்றாகப் படிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், வருகை தந்திருந்த மகளிருக்காக ஒரு பாடலைப் பாடிய அவர், “பார்த்துப் பத்திரமாக வீட்டிற்குச் செல்லுங்கள்” என்று கூறி, தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். அதன் பின்னர், கலந்து கொண்ட நிர்வாகிகளுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
