விபத்து நடந்த 2 மணி நேரத்தில் நீதிபதியின் மகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைக் கண்டித்துப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் நிலையத்தில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம், கொச்சியில் நேற்று முன்தினம் அதிகாலை 2:30 மணியளவில், 17 வயதான நீதிபதியின் மகன் ஓட்டி வந்த பென்ஸ் கார் ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த சம்பவத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த பாலகிருஷ்ணன் (54) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நீதியின் மகன் 17 வயது சிறுவன் என்பதால், அவர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் மீது இதற்கு முன்பாக வழக்குகள் எதுவும் இல்லாததைக் காரணம் காட்டி, அவருக்கு ஜாமீன் வழங்கியது. நீதிபதியின் மகன் 2 மணி நேரத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதைக் கண்டித்துப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல்நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், கார் ஓட்டி வந்த நீதிபதியின் மகன் மது அருந்தவில்லை என்றும், அவர் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் காரை எடுத்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அதே நேரத்தில், மழையின் காரணமாகச் சாலையில் உள்ள குட்டைகளில் தண்ணீர் தேங்கி இருந்ததால், இருசக்கர வாகனத்தில் வந்தவர் திடீரென வாகனத்தைத் திருப்பியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், சம்பவத்தில் தொடர்புடைய நபர் நீதிபதியின் மகன் என்பதால் சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை காப்பாற்றுவதற்கான வேலைகளில் காவல்துறையினர் இறங்கியுள்ளதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், தன் மகனைக் காப்பாற்றுவதற்காக நீதிபதியின் தலையீடு இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனிடையே, சிறுவனுக்குக் காரை வழங்கியது தொடர்பாக, காரின் உரிமையாளரான நீதிபதியின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
