தமிழகத்தில் 2-வது விமான நிலையம் அமைக்க முந்தைய தி.மு.க. அரசு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரை தேர்வு செய்த நிலையில், தற்போதைய த.வெ.க அரசு இந்த இடத்திற்கு மாறாக வேறு இடத்தில் விமான நிலையம் அமைக்க பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், பரந்தூரில் அமையவிருக்கும் புதிய பசுமை வழி விமான நிலையத்தின் இடத்தை மாற்றக் கோரி தமிழ்நாடு அரசு எந்தவொரு முன்மொழிவையும் சமர்ப்பிக்கவில்லை என்று மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்தது.
இது குறித்து தி.மு.க உறுப்பினர் பி.வில்சன் எழுப்பிய கேள்விக்கு சிவில் விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், முன்மொழியப்பட்ட விமான நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு மாநில அரசு எந்தவொரு கோரிக்கையையும் விடுக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும், பரந்தூரில் சர்வதேச பசுமை வழி விமான நிலையத்தை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு (டிட்கோ) சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் 2025 ஏப்ரல் 7 அன்று கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 2024-இல் டிட்கோ சமர்ப்பித்த கொள்கை அளவிலான விண்ணப்பத்தின்படி, இத்திட்டத்தின் முதல் கட்டத்திற்கான மதிப்பிடப்பட்ட செலவு தோராயமாக ரூ.10,500 கோடி ஆகும்” என்று அவர் கூறினார். சென்னைக்கான முன்மொழியப்பட்ட இந்த 2-வது விமான நிலையம், நகரத்திலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் உள்ள பரந்தூரில் 5,746 ஏக்கர் நிலப்பரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. தேவையான மொத்த நிலத்தில் சுமார் 2,500 ஏக்கர் தனியார் நிலமாகவும், மீதமுள்ள நிலம் அரசுக்குச் சொந்தமானதாகவும் உள்ளது.
விமான நிலையத்திற்கான இடமாக பரந்தூர் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, இடப்பெயர்வு மற்றும் விவசாய நில இழப்பு போன்ற கவலைகள் காரணமாக இத்திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரம் மற்றும் அதன் அண்டை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2025 ஜனவரி 20 அன்று அப்பகுதிக்குச் சென்று போராட்டக்காரர்களுக்குத் தனது ஆதரவை தெரிவித்தார். போராட்ட இடத்திற்குச் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, ஏகனாபுரம் அருகே உள்ள ஒரு தனியார் இடத்தில் போராட்டக் குழுவின் பிரதிநிதிகளைச் சந்தித்துத் தனது ஆதரவை உறுதிப்படுத்தினார்.
பின்னர், விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு, முன்மொழியப்பட்ட விமான நிலையத்திற்கு மாற்று இடத்தை ஆராய்ந்து வருவதாக மாநில அரசு தெரிவித்தது. இருப்பினும், மத்திய அரசின் பதிலின்படி, அங்கீகரிக்கப்பட்ட இடத்தை மாற்றக் கோரி எந்தவொரு அதிகாரப்பூர்வ முன்மொழிவையும் மாநில அரசு இதுவரை அனுப்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
