எழுதியவர்கள்: ஹீனா கண்டேல்வால் , வல்லப் ஓசர்கர் , பூர்ணிமா சா
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) தலைமையகம் மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸில் அமைந்துள்ளது. அங்கு ஒவ்வொரு வேலை நாளிலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஆணையரின் அலுவலகக் கதவு, யார் வந்தாலும் அவர்களுக்காக திறந்து வைக்கப்படுகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
ஒருநாள் பிற்பகலில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் அங்கு சென்றிருந்தபோது நூற்றாண்டு பழமையான நூர் முகம்மதி உணவகத்தின் உரிமையாளரும், அந்த உணவகத்தின் நான்காவது தலைமுறை நிர்வாகியான அவரது மகனும் ஆணையரைச் சந்திக்க வந்திருந்தனர். சில நாட்களுக்கு முன்பு, உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவர்கள் உணவகத்தின் உரிமத்தை இடைநிறுத்தியிருந்தது. அந்த இடைநீக்கத்தை எவ்வாறு ரத்து செய்வது என்பதை அறியவே அவர்கள் வந்திருந்தனர். இவ்வாறான சந்தேகங்களுடன் வரும் பலருக்கும் இறுதியில் நேரடியாக ஆணையரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஆணையரைச் சந்திப்பது மிகவும் எளிது என்பதை மும்பையின் உணவகத் துறை உணர்ந்துள்ளது. ஆனால், விதிமீறல்களுக்கு சலுகை பெறுவது அவ்வளவு எளிதல்ல. பதவியேற்ற பிறகு வெளியிட்ட தனது முதல் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் துகாராம் முண்டே, “பொதுமக்களின் உடல்நலத்துடன் விளையாடும் எந்த நபருக்கும் அல்லது நிறுவனத்திற்கும் நிர்வாகம் எந்தவித சலுகையும் வழங்காது” என்று தெளிவாக அறிவித்தார். அதன் பின்னர் நடந்த அமலாக்க நடவடிக்கைகள், அந்த அறிவிப்பை செயல்பாட்டில் நிரூபித்துள்ளன.
மே 25ஆம் தேதி பதவியேற்றதில் இருந்து, மகாராஷ்டிரா முழுவதும் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் 1,131 ஆய்வுகளை நடத்தியுள்ளது. அதாவது, சராசரியாக தினமும் 20-க்கும் மேற்பட்ட ஆய்வுகள். இந்த நடவடிக்கைகளில் 1.6 லட்சம் லிட்டர் கலப்பட பால் உட்பட ரூ49.57 கோடி மதிப்புள்ள உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட குட்கா விற்பனை வலையமைப்புகளுக்கு எதிராக எம்.சி.ஒ.சி.ஏ (MCOCA) சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 56 உணவகங்களின் உரிமங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சாதாரண உணவகங்கள் அல்ல.
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட உணவகங்களில் வற்றில் 73 ஆண்டுகள் பழமையான கே. ருஸ்தம் & கோ., நூர் முகமதி, ஷாலிமார், ஆதித்யா பிர்லா நியூ ஏஜ் ஹாஸ்பிடாலிட்டியின் வார்சா மற்றும் சமையல் கலைஞர் ராகுல் அகேர்கர் நடத்தும் ஃபிளின்ட், மேலும் சமீபத்தில் 110 ஆண்டுகள் பழமையான பார்சி பால் பண்ணை ஆகியவையும் அடங்கும். இந்த கடுமையான நடவடிக்கைகள் காரணமாக, மாநிலம் முழுவதும் பான் கடை உரிமையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிய வியாபாரிகள் மீது கடுமையான குற்றவியல் சட்டங்கள் கண்மூடித்தனமாக பயன்படுத்தப்படுகின்றன என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.
ஆனால், மும்பை மக்களுக்கு புதிய உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையரின் வருகை முதலில் தெரிந்தது ஆய்வுகள் மூலம் அல்ல; வாட்ஸ்அப் மூலம் தான். முன்பு அமைதியாக இருந்த உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஊடகக் குழு, திடீரென மாநிலம் முழுவதும் நடைபெற்ற சோதனைகள் குறித்த செய்திக்குறிப்புகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பாக இயங்கத் தொடங்கியது.
மே 28ஆம் தேதி, பதவியேற்று மூன்று நாட்களிலேயே வெளியிடப்பட்ட முதல் செய்திக்குறிப்பில், உணவுக் கலப்படத்திற்கு எதிரான மாநில அளவிலான சிறப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. அதில் அவர் “ஸ்ரீ துகாராம் முண்டே” என்று குறிப்பிடப்பட்டிருந்தார். பின்னர் இந்த விவரங்களே அவரது நிர்வாக பாணியை எடுத்துக்காட்டுவதாக அமைந்தன. மகாராஷ்டிராவின் அதிகம் அறியப்படாத ஒழுங்குமுறைத் துறைகளில் ஒன்றாக இருந்த உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையை, மாநிலத்தின் மிகவும் கவனிக்கப்படும் துறைகளில் ஒன்றாக மாற்றியுள்ளார் முண்டே.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/07/20/sb16tukarammundhe07-2026-07-20-10-56-56.webp)
அதே நேரத்தில், பொதுமக்களின் பாராட்டு, அரசியல் வட்டாரங்களின் சங்கடம் மற்றும் நிர்வாக விவாதங்களின் மையமாகவும் அவர் மாறியுள்ளார். மேலும், இந்த சிறப்புக் கட்டுரைக்காக அளிக்கப்பட்ட நேர்காணல் கோரிக்கையை முண்டே நிராகரித்தார்.
கிராமத்தில் இருந்து ஆணையர் வரை
இன்று மகாராஷ்டிராவின் மிகவும் பிரபலமான அதிகாரிகளில் ஒருவராக இருக்கும் துகாராம் முண்டே, பீட் மாவட்டத்தின் வறட்சி பாதிப்பு அதிகமுள்ள தட்சோன்னா என்ற கிராமத்தில் ஒரு விவசாயியின் மகனாகப் பிறந்தவர். வயல்களில் வேலை செய்தது, வாரச் சந்தைகளில் காய்கறி விற்றது, மாவட்ட பேரவைப் பள்ளியில் படித்தது போன்ற அனுபவங்களை அவர் பலமுறை பகிர்ந்துள்ளார். 2005ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவர், தனது நேர்மையான மற்றும் கடின உழைப்பாளியான தந்தையிடம் இருந்தே பொதுச்சேவைக்கான மதிப்புகளை கற்றதாகக் கூறியுள்ளார்.
கடந்த இருபது ஆண்டுகளில், அவர் வகித்த பதவிகளைவிட, அடிக்கடி செய்யப்பட்ட பணியிட மாற்றங்களே அதிகம் பேசப்பட்டன. தற்போதைய உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் பதவி, அவரது 25வது இடமாற்றம் எனக் கூறப்படுகிறது. 16-க்கும் மேற்பட்ட முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய அவர், திடீர் ஆய்வுகள், கடுமையான சட்ட அமலாக்கம் மற்றும் சமரசமற்ற நிர்வாக பாணிக்காக பெயர் பெற்றார். ஆதரவாளர்கள், விதிகளுக்கு தலைகுனிய மறுத்ததற்கான விலையாக இந்த இடமாற்றங்களைப் பார்க்கின்றனர். விமர்சகர்கள், ஆலோசனைக்கும் சமரசத்திற்கும் இடமளிக்காத நிர்வாக முறையின் விளைவாகவே இந்த பணியிட மாற்றம் என்று பார்க்கின்றனர்.
அவரது தொழில் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இரு பார்வைகள்
சோலாப்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது ஜல்யுக்த் ஷிவார் திட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான கிராமங்களை டேங்கர் நீர் சார்பிலிருந்து விடுவித்து, “மகாராஷ்டிராவின் நீர் மனிதர்” என்ற பட்டத்தைப் பெற்றார். 2015ஆம் ஆண்டு ஆஷாடி வாரி யாத்திரையின்போது, கடுமையான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்தியதால், அப்போதைய வருவாய்த்துறை அமைச்சர் ஏக்நாத் கட்சேவுடன் நேரடி மோதல் ஏற்பட்டது. இதனால் சட்டப்பேரவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளுக்கு அவர் மரியாதை அளிப்பதில்லை என்று அஜித் பவார், குற்றம்சாட்டினார்.
2016-ஆம் ஆண்டு, நவி மும்பை மாநகராட்சி ஆணையராக இருந்தபோது, சட்டவிரோத கட்டிட இடிப்பு, சொத்து வரி வசூல், அனுமதியற்ற விளம்பர பலகைகள் அகற்றம் மற்றும் அதிகாலை அதிகாலை நேர ‘ஆணையருடன் நடைபயணம்’ ஆய்வுகளை அறிமுகப்படுத்தினார். மக்கள் இதை வரவேற்றாலும், அனைத்து கட்சிகளையும் சேர்ந்த கவுன்சிலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை புறக்கணித்து அவர் சர்வாதிகார பாணியில் செயல்படுவதாக குற்றம்சாட்டினர். இதன் உச்சமாக, தேசியவாத, காங்கிரஸ் மற்றும் சிவசேனா இணைந்து அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அப்போது முதலமைச்சராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் தலையிட்டு அந்த தீர்மானத்தை நிறுத்திவைத்தார்.
2022ஆம் ஆண்டு சுகாதார ஆணையராக இருந்த குறுகிய காலத்திலும், திடீர் மருத்துவமனை ஆய்வுகள், பயோமெட்ரிக் வருகைப் பதிவு மற்றும் தனியார் மருத்துவப் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட மருத்துவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பொதுமக்களின் ஆதரவைப் பெற்றன. ஆனால் சில வாரங்களிலேயே அவர் மாற்றப்பட்டதால், அவரை தொடரச் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மனுக்களையும் தாக்கல் செய்தனர்.
உணவு மற்றும் மருந்து நிர்வாக அலுவலகத்தில் ஏற்பட்ட மாற்றம்
உணவு மற்றும் மருந்து நிர்வாக தலைமையகத்தின் தரைத்தளத்திலேயே மாற்றம் தென்படுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு வெறிச்சோடி கிடந்த அந்த இடம், இன்று புகார் அளிப்பவர்கள், உணவக உரிமையாளர்கள் மற்றும் உணவுத் தொழில் நிறுவனங்களால் நிரம்பியுள்ளது. கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள், சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளத்தின் மூலம் வரும் புகார்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைக்கு அனுப்பப்படுகின்றன. தற்போது தினமும் 500 முதல் 1,100 புகார்கள் வரை துறைக்கு வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஒவ்வொரு புகாருக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரே பகுதியில் நான்கு புகார்கள் வந்தால், ஒரே நாளில் சென்று அனைத்தையும் ஆய்வு செய்கிறோம்” என்று ஒரு உணவுப் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். அலுவலகத்தின் தினசரி செயல்பாடு நான்காவது மாடியில் இருந்து தீர்மானிக்கப்படுகிறது. முண்டே காலை 9.40 மணிக்கு அலுவலகம் வந்து, மாலை 6.15 மணியளவில் புறப்படுகிறார். “முன்பு 11 மணிக்கு வந்தவர்கள் கூட இப்போது அதிகபட்சம் 10.30 மணிக்குள் வந்து விடுகின்றனர். முன்பு அதிகாரிகள் தாமதமாக வந்து தாமதமாகச் செல்வார்கள்; இப்போது வேலை முடிப்பதே முக்கியம்” என்று ஒரு அதிகாரி கூறினார்.
பல அதிகாரிகளுக்கு இது நீண்ட வேலை நேரமாக மாறியுள்ளது. வேலை மிகவும் அதிகமாக உள்ளது. அவர் மிக வேகமாக செயல்படுகிறார்; அதே வேகத்தில் நாங்களும் செல்ல வேண்டியுள்ளது” என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார். கடந்த ஆண்டு முழுவதும் சுமார் 15,000 மாதிரிகள் மட்டுமே பரிசோதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஜூலை 1 முதல் 15ஆம் தேதி வரை மட்டும் 8,700 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு புதிய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நியமனம், நிர்வாக ஆதரவு மற்றும் புதிய செயல்முறை வழிகாட்டுதல்கள் காரணம் என அவர்கள் கூறுகின்றனர்.
ஊடகத் தொடர்பும் தற்போது துறையின் முக்கிய உத்தியாக மாறியுள்ளது. முன்பு பொதுமக்களுக்கு தெரியாமல் இருந்த ஆய்வுகள், இன்று தினசரி செய்திக்குறிப்புகள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் புள்ளிவிவரங்களுடன் வெளியிடப்படுகின்றன. அவரது நேர்மையை யாரும் கேள்வி கேட்கவில்லை. அவரது நேர்மையையோ உழைப்பையோ யாரும் கேள்வி கேட்கவில்லை. விவாதம் எப்போதும் அவரது செயல்முறைகளைப் பற்றித்தான்” என்று முன்னாள் சக அதிகாரி ஒருவர் கூறினார்.
மக்களின் நலனுக்காக ஒரு முடிவு சரி என்று அவர் நம்பினால், யார் எதிர்த்தாலும் அதை செயல்படுத்துவார்” என்று ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மற்றொருவர், “அவர் அரசியலைப் பார்க்கும் முன் சட்டப் புத்தகத்தைப் பார்ப்பவர்” என்று கூறினார். ஆனால், விமர்சனங்களும் உள்ளன. நிர்வாகம் என்பது விதிகளை அமல்படுத்துவது மட்டுமல்ல; மக்களையும் உடன் அழைத்துச் செல்வது” என்று முன்னாள் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார். ஒவ்வொரு பிரச்சினைக்கும் பல தரப்பினர் இருக்கிறார்கள். அனைவரும் எதிரியாக மாறினால் செயல்படுத்துவது கடினமாகிவிடும்” என்று முன்னாள் அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
உணவக உரிமையாளர்களின் அச்சம்
மும்பை உணவக உரிமையாளர்களிடையே முண்டேவின் நடவடிக்கைகள் கலவையான எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளன. பலர் இந்த நடவடிக்கை அவசியமானது என ஒப்புக்கொண்டாலும், “முழுமையான குறையற்ற நிலையே இப்போது அளவுகோலாக மாறுகிறதா?” என்ற கேள்வியை எழுப்புகின்றனர். இது குறித்து ஒரு உணவக உரிமையாளர் கூறுகையில், 70 ஆண்டுகளுக்கும் மேலான கே ருஷ்டம், நூற்றாண்டு பழமையான நூர் முகமதி, பார்சி பால் பண்ணை போன்றவற்றையே மூடிவிட்டார்கள். ஆனால் வெளியான புகைப்படங்களைப் பார்த்தால் உண்மையிலேயே சுத்தமில்லாமல் இருந்தது” என்றார்.
மேலும், எவ்வளவு கவனமாக இருந்தாலும், அவர்கள் ஆய்வுக்கு வந்தால் ஏதாவது ஒரு குறை கண்டுபிடிக்க முடியும். அதனால் அவர்கள் வரக்கூடாது என்பதே எங்களின் ஒரே பிரார்த்தனை. சிலர், நடவடிக்கைகள் பெரும்பாலும் பிரபலமான உணவகங்களை மட்டுமே குறிவைப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.
முண்டேவை இடமாற்றம் செய்யும் திட்டம் இல்லை
முண்டேவின் நடவடிக்கைகள் மகாராஷ்டிர சட்டப்பேரவையிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. தேசியவாத காங்கிரஸ் (SP) சட்டமன்ற உறுப்பினர் ஜிதேந்திர அவ்ஹாட், குறைந்தது மூன்று ஆண்டுகள் அவரை மாற்றக் கூடாது என்று அரசிடம் கோரிக்கை வைத்தார். பா.ஜ.க உறுப்பினர் சுதிர் முங்கந்திவாரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.
உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைச்சர் நரஹரி ஜிர்வால், “அவரை மாற்றும் எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை; அவருக்கு எதிரான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்” என்று சட்டப்பேரவையில் தெரிவித்தார். முண்டேவுக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், பொதுமக்களின் பாராட்டோ விமர்சனமோ அவரது பணியை மாற்றியதில்லை. அவர் தனது கடமையை சட்டத்தை அமல்படுத்துவதாக மட்டுமே கருதுகிறார்.
மகாராஷ்டிராவில் கலப்பட உணவுக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தும் அந்த அதிகாரி, தனிப்பட்ட வாழ்க்கையில் பாலைச் சேர்க்காத கருப்புக் காபியையே குடிப்பது இந்தக் கதைக்கு ஒரு சுவாரஸ்யமான முடிவாக அமைந்துள்ளது.
