200 ஏக்கர் நெற்பயிரில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை

Summary

வயல்களில் தேங்கிய மழை நீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை வெளுத்து வாங்கியது.

ஊத்துக்கோட்டை

இதனால் ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் பகுதியில் சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. வயல்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளதால் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் வயல்களில் தேங்கிய தண்ணீர் வெளியேற வழியில்லாததால் அப்படியே தேங்கி நிற்கிறது.

போராட்டம்

இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் இந்த தண்ணீரை அகற்றி அருகில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் விடவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு அதிகாரிகள் சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த போந்தவாக்கம் பகுதி மக்கள் ஏராளமானோர் நேற்று அப்பகுதியில் உள்ள ஆறுவழிச்சாலையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆறுவழிச்சாலை அமைக்கும் அதிகாரிகள் மற்றும் கிருஷ்ணா நீர்வளத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

மழை நீர்

எனினும் வயல்களில் தேங்கிய மழை நீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் நெற்பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

விவசாயிகள்

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, சித்தூர்-தஞ்சூர் கூட்டு ரோடு புறவழிச்சாலை வயல்வெளி குறுக்கே அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் தண்ணீர் செல்வது தடைபட்டு உள்ளது. இப்பகுதியில் உள்ள 2 மதகுகள் தண்ணீர் செல்ல போதுமானதாக இல்லை. தண்ணீர் மெதுவாக செல்கிறது. எனவே கூடுதல் மதகுகள் அமைக்க வேண்டும். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நெல் பயிரிட்டோம். ஏக்கருக்கு சுமார் ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து உள்ளோம். தற்போது வயல்வெளி முழுவதும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறுவழிச் சாலை பணிகள் நடைபெறும் இடத்தில் கிராம மக்கள் செல்வதற்கு வழி அமைத்து தரவேண்டும் என்றனர்.

Source link