2029ம் ஆண்டு டிசம்பர் 31க்குள் ஒழிக்க கெடு; போதைப்பொருள் எதிர்ப்பு பேரணியை துவங்கி வைத்தார் அமித்ஷா

புதுடில்லி: டில்லியில் உள்ள தேசிய காவல் நினைவுச் சின்னத்தில் நடைபெற்ற தேசிய காவல் நினைவு தின அணிவகுப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.

நாட்டின் பாதுகாப்பிற்காகத் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த காவலர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய அளவிலான பைக் பேரணியைத் துவங்கி வைத்தார். அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:

நமது காவல் படைகள், 2029ம் ஆண்டு டிசம்பர் 31க்குள் போதைப்பொருள் கும்பல்களை ஒழிப்பதற்காக போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை நடத்துவதோடு, இந்தத் தீய பழக்கம் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்துகின்றன.

இன்று, காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு, ‘போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம்’ என்ற பைக் பேரணி கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த டிரைவர்கள் மற்றும் சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், பிஎஸ்எப், எஸ்எஸ்பி, ஐடிபிபி, என்ஐஏ ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் இந்தப் பேரணி, போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்துவது நோக்கமாகும்.

இந்த பேரணியானது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைக் கடந்து, குஜராத்தின் கெவாடியாவில் அக்டோபர் 31ம் தேதி நிறைவடையும். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

Source link