பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தனது 88-வது பிறந்தநாளையொட்டி தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியின் முழுப் பொறுப்பையும் அன்புமணி ராமதாஸிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக கட்சியின் தலைமை மற்றும் நிர்வாகப் பொறுப்புகளை மையமாகக் கொண்டு மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தரப்பினருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன.
இந்நிலையில், கடந்த ஜூன் 24-ம் தேதி ராமதாஸ் – சரஸ்வதி திருமண நாளில் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற சந்திப்பில், தந்தை – மகன் இருவரும் மனம் திறந்து பேசி, ஒருவரையொருவர் கட்டியணைத்துச் சமரசமாகினர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றது. தொடர்ந்து, ஜூலை 25 அன்று நடைபெற்ற ராமதாஸின் 88-வது பிறந்தநாள் விழாவில் இருவரும் இணைந்து 88 மரக்கன்றுகளை நட்டனர். அப்போது, இனி தாம் அரசியல் பேசப் போவதில்லை என்றும், அரசியலில் தலையிடப்போவதில்லை. இனி பாமகவை முழுமையாக அன்புமணி வழிநடத்துவார் என ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள விடுதியில் பாமக பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூலை 29) நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
பாமக தலைவர்: அன்புமணி ராமதாஸ் (மீண்டும் தேர்வு)
பொதுச்செயலாளர்: வடிவேல் ராவணன் (மீண்டும் தேர்வு)
பொருளாளர்: திலகபாமா (மீண்டும் தேர்வு)
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பல்வேறு முக்கிய கருத்துகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டார். மருத்துவர் அய்யா வாழும் காலத்திலேயே பா.ம.க தமிழ்நாட்டை ஆள வேண்டும். 2031-ல் பா.ம.க ஆட்சி அமைக்கும் வகையில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாகச் செயல்பட வேண்டும். அனுபவம் இல்லாத த.வெ.க. அரசுக்கு, நாம் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். எனக்கு ஈகோ இல்லை; தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது இலக்கு என்றார்.
ஆந்திர மாநிலத்தில் பா.ம.க.வின் கிளை விரைவில் தொடங்கப்படும் என அன்புமணி அறிவித்தார். அம்மாநில மக்கள் பா.ம.க தொடங்கப்பட வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். தென்மேற்கு பருவமழை 40%க்கும் குறைவாகவே பெய்துள்ளதால் தமிழ்நாடு முழுவதையும் வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், விவசாயிகளின் நிலவரியை ரத்து செய்து, குறுவை மற்றும் சம்பா சாகுபடி செய்ய முடியாமல் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மேலும் 31 தீர்மானங்கள் அந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன..?
1. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ், ச.வடிவேல் இராவணன், ம. திலகபாமா ஆகியோருக்கு வாழ்த்துகள். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பொதுச் செயலாளர் ச.வடிவேல் இராவணன், பொருளாளர் ம.திலகபாமா மற்றும் பிற நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டுமே 28-ம் தேதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அவர்களின் பதவிக்காலம் இந்திய தேர்தல் ஆணையத்தால் ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் ஆகஸ்ட் 1 தேதியுடன் நிறைவடைவதால், அப்பதவிகளுக்கு கட்சி அமைப்பு விதி எண்கள் 26, 27 ஆகியவற்றின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டது. மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர, பேரூர் அளவிலான தேர்தல்கள் பல கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டன.
தொடர்ந்து மாநில பதவிகளுக்கு அறிவிக்கப்பட்ட தேர்தல்களில் தலைவர் பதவிக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பொதுச் செயலாளர் பதவிக்கு ச.வடிவேல் இராவணன், பொருளாளர் பதவிக்கு ம.திலகபாமா ஆகியோர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்ததால் அவர்கள் மூவரும் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக பா.ம.க. அமைப்புத் தேர்தலை நடத்த அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அவர்களின் தேர்வை இப்பொதுக்குழு அங்கீகரிப்பதுடன், அவர்களின் பணி சிறக்க நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கடந்த ஆண்டு ஜூலை 25-ம் நாள் தொடங்கி நவம்பர் 9-ஆம் நாள் வரை மொத்தம் 109 நாள்களுக்கு தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்ட தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் தான் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் அமைத்தது. 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வீசிய அலை பாட்டாளி மக்கள் கட்சி வலிமையாக உள்ள மாவட்டங்களில் நுழையாமல் தடுத்ததும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகும் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் சதிக்கு எதிராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மேற்கொண்ட 4 நாள் விழிப்புணர்வு பரப்புரை பயணம் உழவர்களிடம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த மக்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
இத்தகைய முன்னெடுப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு பாட்டாளி மக்கள் கட்சியை மேலும் வலுப்படுத்துவார்; அதிகாரத்திற்கு அழைத்துச் செல்வார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் இந்த பொதுக்குழுக் கூட்டம், அதற்காக அவர் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஆதரவளிக்க உறுதியேற்கிறது.
2. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் சமூகநீதி, அரசியல் சாதனைகளை இப்பொதுக்குழு பாராட்டுகிறது; நன்றி தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக திகழ்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் அண்மையில் 88-ஆம் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ள நிலையில் அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. அவர் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டுகள் வாழ வேண்டும் என இப்பொதுக்குழு வாழ்த்துகிறது.
தமிழ்நாட்டிலும், தேசிய அளவிலும் 6 வகையான இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்துக் கொடுத்து, 100 கோடிக்கும் கூடுதலான மக்களுக்கு சமூகநீதி வழங்கியவர்; சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் ஆர்வம் கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை தூர் வாரியவர்; சமச்சீர் கல்வி கொண்டு வந்தவர்; மருத்துவம், வேளாண்மை, நீர்ப்பாசனம் சார்ந்து ஏராளமான முன்னெடுப்புகளை மேற்கொண்டவர்; சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபட்டவர்; ஈழத்தமிழர் நலனுக்காக எண்ணற்ற போராட்டங்களை முன்னெடுத்தவர்; தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் தலைவர்களாலும் மதிக்கப்பட்டவர் என ஏராளமான பெருமைகள் மருத்துவர் அய்யா அவர்களுக்கு உண்டு. தமிழ்நாட்டிற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் ஆற்றிய பணிகளுக்காக மருத்துவர் அய்யா அவர்களுக்கு இந்தப் பொதுக்குழு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
3. தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என்று ஆளுநர் உரை வாயிலாக அறிவித்த முதலமைச்சர் விஜய்க்கும், அறிவிக்கச் செய்த பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் நன்றியும், பாராட்டுகளும் – சமூகநீதி சர்வேயை உடனடியாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் சதித்திட்டத்தை முறியடிப்பதற்காக காவிரி பாசன மாவட்டங்களில் 4 நாள்கள் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்ட மருத்துவர் அன்புமணி ராமதாஸ்-க்கு பாராட்டுகள்.
5. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்திற்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசுக்கு கண்டனம்: புதிய நடுவர் மன்ற கோரிக்கையையும், கர்நாடக அரசுடன் நேரடியாக பேச்சு நடத்தும் முடிவையும் கைவிட்டு, தமிழக அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும்.
6. விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். வெளிச்சந்தையில் கடன் வாங்கியாவது கூட்டுறவு வங்கிகளில் அரசு செலுத்த வேண்டும்.
7. மாணவர்களின் உயிர்களைப் பறிக்கும் நீட் தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும்; நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் சட்டத்தை மீண்டும் இயற்றி, மத்திய அரசின் ஒப்புதலைப் பெற அனைத்து அரசியல் கட்சிகளும் கைக்கோர்த்து செயல்பட வேண்டும்.
8. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் மாற்ற வேண்டும்; 50 ஆண்டு கால அநீதிக்கு இப்போதாவது மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும்.
9. தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரியை முழுமையாக ரத்து செய்வதுடன், பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
10. வறட்சியால் குறுவை சாகுபடி செய்ய முடியாத உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் நிவாரண உதவி வழங்க வேண்டும்.
11. நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.5000 வீதம் கொள்முதல் விலை வழங்க வேண்டும்.
12. பள்ளிக்கரணை உள்ளிட்ட 26,883 சதுப்பு நிலங்களையும் உடனடியாக எல்லைகளை வரையறுத்து அறிவிக்கை செய்ய வேண்டும் .
13. ரெஸ்டோ பார்களை திறக்கும் கேடான திட்டத்தை அரசு கைவிட வேண்டும்; மதுக்கடைகளை படிப்படியாக மூடி தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும்.
14. தமிழ்நாட்டில் இன்னும் கட்டுப்படுத்தப்படாத போதைப்பொருள்கள் நடமாட்டம்: இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
15. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்: சிங்கப்பெண் சிறப்புப் படைகளை வலுப்படுத்த வேண்டும்.
16. தமிழ்நாட்டிலிருந்து கனிம வளங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது; கடந்த காலகனிமவளக் கொள்ளை குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும்.
17. 12 புதிய மணல் குவாரிகளை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். கட்டுமானத் தேவைகளுக்கு மணல் இறக்குமதியை ஊக்குவிக்க வேண்டும்.
18. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்பும் வகையில் அடுத்த ஓராண்டில் ஒன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
19. தமிழ்நாட்டில் தனியார் தொழில் மற்றும் வணிக நிறுவன வேலைவாய்ப்புகளில் 75% பணிகளை தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க வகை செய்யும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
20. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வாக்குறுதி அளித்தவாறு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
21. அரசு பள்ளிகளின் வீழ்ச்சியை தடுக்க வேண்டும்; அரசு பள்ளிகளில் ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
22. பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுக்களில் யு.ஜி.சி பிரதிநிதியைச் சேர்க்கக் கூடாது; பல்கலைக்கழக சட்டங்களில் இதற்காக திருத்தம் செய்யக் கூடாது.
23. பாலுக்கான கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும்; தனியார் நிறுவனங்களின் பால் விற்பனை விலையை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும்.
24. விண்ணைத் தொடும் அரிசி விலையால் ஏழை மக்கள் அவதி. விலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
25. உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி தயார். கிராம அளவில் மக்களை சந்தித்து ஆதரவைத் திரட்ட வேண்டும்.
26. தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்; 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
27. மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் ஓ.பி.சி.களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்குவதற்கான ரோகிணி ஆணையத்தின் பரிந்துரை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்: உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
28. காவிரி பிரச்சினையில் புதுச்சேரியின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; மேகதாது அணைக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
29. புதுவையில் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செயல்பட்டு வரும் மதுக்கடைகள், சாராயக்கடைகளை மூட வேண்டும்.
30. புதுவையில் தனியார் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 75 விழுக்காட்டை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கீடு செய்து சட்டம் இயற்ற வேண்டும்.
31. பாட்டாளி மக்கள் கட்சியின் கணக்குத் தணிக்கையாளர் அரங்க. சுப்புரத்தினம் மறைவுக்கு இரங்கல்; புதிய தணிக்கையாளராக திருவாளர்கள் பி.எஸ். மூர்த்தி அசோசியேட்ஸ் நியமனம் செய்யப்பட்டதற்கு ஒப்புதல்.
பாட்டாளி மக்கள் கட்சியின் வரவு – செலவு கணக்குகளை தணிக்கை செய்ய சென்னைஅடையாறை சேர்ந்த திருவாளர்கள் பி.எஸ்.மூர்த்தி அசோசியேட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நியமனத்திற்கு இந்தப் பொதுக்குழு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கிறது.
