ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில், 35 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன்மூலம், ஜிம்பாப்வேவை இந்திய அணி ஒயிட் வாஷ் செய்தது.
3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இருபோட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஏற்கனவே தொடரை வென்று விட்டது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேவில் இன்று நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணிக்கு சூர்யவன்ஷியும், அபிஷேக் ஷர்மாவுக்கு துவக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த போட்டியில் ஏமாற்றம் அளித்த அபிஷேக் ஷர்மா (2) இந்த ஆட்டத்திலும் சொற்ப ரன்னில் வெளியேறினார். அதன்பிறகு, சூர்யவன்ஷி மற்றும் இஷான் கிஷான் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். இஷான் 29 ரன்னில் அவுட்டானாலும், மறுமுனையில் அதிரடியாக ஆடிய சூர்யவன்ஷி 31 பந்தில் அரைசதம் விளாசினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 2வது அரைசதத்தை பதிவு செய்தார்.
49 பந்தில் 81 ரன் எடுத்திருந்த போது சூர்யவன்ஷி ஆட்டமிழந்தார். அதன்பிறகு, ஸ்ரேயாஷ் ஐயர் 27 ரன்னும், ரிங்கு சிங் 25 ரன்னும் குவித்தனர். இதனால், 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன் குவித்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் எவான்ஸ் 2 விக்கெட்டும், ராசா, முஷர்பானி, மாதவரே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
193 ரன் இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. மயாங்க் யாதவ் வீசியி போட்டியின் முதல் பந்திலேயே துவக்க வீரர் பென்னட் விக்கெட் இழந்து நடையைக் கட்டினார். அதன்பிறகு, மையர்ஸ் (20), சிக்கந்தர் ராசா (0) ஆகியோரின் விக்கெட்டை யாஷ் தாகூர் அடுத்தடுத்து கைப்பற்றினார். அடுத்து பென் கரனும் (20) ரவி பிஷ்னோ வசம் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால், அந்த அணி 65 ரன்னுக்கே 4 விக்கெட்டை இழந்தது.
அதன்பிறகு ஜோடி சேர்ந்த ரியான் மற்றும் மாதவேரே ஓரளவுக்கு தாக்குபிடித்து ரன் சேர்த்தனர். இருவரும் சேர்ந்து 60 ரன் குவித்த நிலையில், மாதவேரே (28) அவுட்டானார். மருமாணி (1), எவன்ஸ் (14) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் ஜிம்பாப்வே அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு157 ரன் மட்டுமே குவிக்க முடிந்தது. இதன்மூலம், 35 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக ஆடிய ரியான் அரைசதம் (54) அடித்தார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. ஸ்ரேயாஷ் ஐயர் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, கைப்பற்றிய முதல் தொடர் இதுவாகும்.
