30 ஆண்டுகால மறுமலர்ச்சியின் ஓசை சங்கொலி ஏடு

றுமலர்ச்சி தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வார ஏடான சங்கொலியின் 30-ஆம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நக்கீரன் ஆசிரியர், கவிஞர் காசி ஆனந்தன், காதர் மொய்தீன், திருமுருகன் காந்தி, அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் சங்கொலியில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ம.தி.மு.க. பொருளாளர் செந்திலதிபன் பேசியதாவது, “கடந்த 30 வருடங்களாக சங்கொலி ஏட்டில் வைகோ எழுதும் “கண்ணின் மணிகளே’ என்ற மடல் உள்ளூர் அரசியலிலிருந்து உலக அரசியல்வரை அலசி ஆராய்ந்து இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வூட்டியது. இன்னும் அரசியல் பேசிக்கொண்டி ருக்கிறது”’என்றார்.

அமைச்சர் ராஜ்மோகன் பேசும்போது, “முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஒலி, எங்கு செல்வோம், எப்படி செல்வோம் என்று அந்த ஒலிக்குத் தெரியாது. தாயுள்ளம் கொண்ட வைகோ என்ற மனிதனை சுமந்துகொண்டு கருவாகி, உருவாகி இந்த பூமியில் பிறந்து தாயகம் அலுவலகத்தில் தவழ்ந்து, தமிழ்நாடு முழுவதும் நடைபயணத்தில் நடைபயிற்சி செய்து சிறைச்சாலை எனக்கு பூஞ்சோலை என்று அங்கே ஓடி உலகமெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்களில் பாடி திரைகடல் ஓடி திரவியம் தேடி அது ஓடியது, அது பாடியது. இன்று தான் அந்த சங்கொலிக்கு இன் னொரு வயது கூடியது. நாகரிக அரசியலைத் தெரிந்து கொள்ள அனைத் துக் கட்சித் தோழர்களும் சங்கொலி வாசிக்க வேண்டும்”’என்றார்.

திருமுருகன் காந்தி பேசும்போது “திராவிடப் பாரம்பரியத்தில் சங்கொலி ஏட்டிற்கு ஒரு முக்கிய இட முண்டு. தமிழ்த்தேசியத்தின் தேவையை உணர்ந்து அந்த போராட்டக் களங்களில் ஈடுபடுகிற இயக்கமாக ம.தி.மு.க. இருக்கிறது. அந்த இயக்கத்தின் ஆவணப்பூர்வமாக அனைத்தும் சங்கொலியில் பதிவாகியிருக்கிறது. பத்திரிகை இல்லாமல் அரசியல் இயக்கங்கள் கிடையாது. அரசியல் மாற்றங்கள் கிடையாது. கடந்த 30 ஆண்டுகாலமாக திராவிட மற்றும் தமிழ்த் தேசிய, தமிழீழ அரசியல் களத்தில் என்ன போராட்டங்களை எல்லாம் முன்னெடுத்தது என்று பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் சங்கொலியில் பார்க்கலாம். ஒன்றிய அரசு தமிழர்கள் மீது அடக்குமுறைகளை ஏவிக்கொண்டிருந்த காலத்தில்தான் ம.தி.மு.க. உருவானது. தனியார் மயம், உலகமயமாக்கல், அணுஉலை எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, தமிழீழ போராட்டம் என்று எல்லா போராட்டக் களத்திலும் ம.தி.மு.க. நின்றிருக்கிறது. அதனாலேயே கடுமையான அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறை களையும் இந்த இயக்கம் சந்தித்திருக் கிறது. அரசியல் அதிகாரம் இல்லை, ஊடக பலம் இல்லை, ஆனாலும் களத்தில் தொடர்ச்சியாகப் போராட உங்களை வழிநடத்தியது தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் தான். இந்த இயக்கம் தான் தமிழ்நாட்டு போராட்டக்களங்களின் கலங்கரை விளக்கமாக இருக்கிறது. 

sangoli2

இதையெல்லாம் எங்கே நாம் ஆவணமாகப் பார்ப்பது என்றால் சங்கொலிதான் நம்முன் இருக்கிறது. எங்களுக்கு ஏதேனும் அரசியல் ஆவணம் தேவையென்றால் வரலாற்றில் சில அறிக்கைகளைப் பார்க்க வேண்டுமென்றால் நாங்கள் சங்கொலியைத் தேடிப் பார்க்கிறோம். எங்களுடைய மே பதினேழு இயக்கம் பற்றிய செய்திகளை எல்லாம் சங்கொலிதான் சுமந்து கொண்டிருக்கிறது. அதன் குரலிலே எங்களின் வரலாறும் இருக்கிறது என்ற மகிழ்ச்சி எங்களுக்கு உண்டு. எப்படி ஒரு இயக்கத்தை நடத்துவது, தொண்டர்களை போராட்ட உணர்வை எப்படி ஊக்கு விப்பது, நம்பிக்கையை எப்படி மீட்டெடுப்பது இவற்றிற்கு நடுவே அவர்களை எப்படி அரசியல் படுத்துவது இதையெல்லாம் செய்தவர் நம் வைகோ அய்யா அவர்கள். அவையெல்லாம் ஆவணமாக சங்கொலியில் இருக்கிறது. காலத்தின் கண்ணாடியாக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும்”’என்றார்.  

sangoli3

நிகழ்வில் நக்கீரன் ஆசிரியர், “இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே என்னிடம் தேதி கேட்டார்கள். என்னிடம் ஏன் தேதி கேட்கிறீங்க, வாங்கன்னு சொன்னால் வரப்போறேன். இந்த நிகழ்வில் கலந்துகொள்வது என் கடமை என்று வந்திருக்கிறேன். பத்திரிகை நடத்திப் பார்த்தால் தான் தெரியும் அதன் அருமை. அதுவும் 30 வருடங்களாக தொடர்ந்து நடத்துவது என்பது சாதாரண விசயம் அல்ல. தொடர்ச்சியாக பத்திரிகை நடத்திக்கொண்டிருக்கிற எனக்கு அதன் வலி தெரியும். சங்கொலி ஆரம்பிக்கும் போது அந்த நாளேட்டைப் பார்த்து மறைந்த சின்ன குத்தூசி அய்யா சொன்னாங்க, “எஸ்.எஸ்.மாரிச்சாமி நடத்திய காண்டீபன் மாதிரி இருக்கான்னு பாருங்க’ என்றார். “நான் பார்த்தது இல்லை’ என்றேன், அப்போது அவர் சொன்னார்: “இதுதான் அது’. அந்த அளவிற்கு தீயாய் இருந்தது. சங்கொலியை தினசரி பத்திரிகை நடத்துகிறவர்கள் என்ன தலையங்கம் வருது, மடல் என்ன வருது என்று வாசிக்க ஆவலோடு காத்திருப்பார்கள். அந்த அளவிற்கு செய்திகள் நிறைந்திருக்கும்.

sangoli4

பொடா சட்டம் ஆரம்பித்தபோது முதல் பிள்ளையார் சுழி அண்ணன் வைகோதான். 42வது ஆளாக நான் பொடா சட்டத்தால் கைது செய்யப் பட்டேன். வைகோ அண்ணன் கைது செய்யப்பட்ட பிறகு சங்கொலியும், ம.தி.மு.க.வும் என்னவாகப்போகிறது என்று பார்த்தார்கள். சங்கொலியை சங்கை நெறித்துவிட வேண்டும் என அலைந்தார்கள். ஆனால் அவரோ சிறையி லிருந்து வாரம் தவறாமல் மடல் எழுதினார். அதை நன்மாறன் வாங்கி வந்து பிரசுரித்து வந்தார். 40 ஆயிரம் பிரதிகள் விற்பனையானது. சிறையிலிருந்தாலும் தொண்டர்களை சங்கொலியில் வெளியான கட்டுரைகள் சோர்வடையாமல் பார்த்துக்கொண்டது. அந்த கட்டுரைகள் எல்லாம் புத்தகமாக வெளிவந்துள்ளது அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டும் என்று சொல்வேன்.

நக்கீரனை அடக்குமுறையைச் சந்தித்த பத்திரிகைன்னு அறிமுகப்படுத்தினார்கள். ஆளுநரைப் பற்றி எழுதியதால் விமான நிலையத்தில் வைத்து என்னை கைது செய்தார்கள். அதற்குள் தகவல் வாட்ஸ் அப் வழியாக பரவி விட்டது.

sangoli5

இதனால் என்னை காலிசெய்யத் திட்டமிட்டி ருந்தவர்கள், பிறகு சிந்தாதிரிப்பேட்டை கொண்டு போனார்கள். அங்கே ஒரு காவலர் என்னிடம் வந்து உங்களுக்கு வைகோ தான் அட்வகேட்டா என்றதும் ஆமாம் என்றேன். பிறகு தான் வைகோ அண்ணன் எனக்காக சாலை மறியல் செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. பிறகு என்னை கோஷ் ஆஸ்பிட்டல் மாற்றினார்கள். அங்கே மு.க.ஸ்டாலின் அன்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள் வந்தார் கள். பிறகு அல்லி நகரத்திற்கு மாத்தினார்கள் அங்கே திருமாவளவன், முத்தரசன் போன்றவர்கள் வந்தார்கள். பிறகுதான் என்னை விட்டார்கள். அன்று மட்டும் வைகோ அண்ணன் வராவிட்டால், சாலை மறியல் செய்யாவிட்டால் என் நிலை மோசமாகியிருக்கும். இந்த அரசு போட்ட திட்டத்தை நிறைவேற்றியிருக்கும். அண்ணன் வைகோவால்தான் அது நடைபெறாமல் போனது. அதற்காக நான் இன்றும் நன்றியோடு இருக்கிறேன். சங்கொலி என்றும் முழங்க வாழ்த்துகள்”’என்றார்.

ம.தி.மு.க.  பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது, “இந்து பத்திரிகையின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் ராம் பங்கேற்று வாழ்த்த, புரட்சி தமிழர் சத்யராஜ் வாழ்த்த, நினைவில் வாழும் மணிவண்ணன் வாழ்த்த சங்கொலி ஏடு தொடங்கப்பட்டது.  இந்த நிகழ்வில் பேசும் அளவிற்கு என்னுடைய குரல் வளம் இல்லை. எவ்வளவோ மேடைகளில் கத்தி பேசியிருந் தாலும் என் தொண்டைக்கு எந்த சிக்கலும் வந்தது இல்லை. ஆனால், கருவேல மரத்தை வெட்டுவதற்காக கடந்த சில நாட்களாக மரம் வெட்டும் கருவியை நானே இயக்கியதில் அதிலிருந்து வெளிவந்த கரியமில வாயு என்னுடைய நுரையீரலைப் பாதித்து என் தொண்டை பேச முடியாத அளவிற்கு ஆகிவிட்டது” என்று பேசியதோடு, ம.தி.மு.க. ஆரம்பிக்கும் முன்னர் என்னவெல்லாம், எவ்வாறெல்லாம் விமர்சிக்கப்பட் டாரோ அதைப் போலவே தற்போது த.வெ.க.விற்கு ஆதரவு தெரிவித்ததால் விமர்சிக்கப்படுவதாகப் பேசினார். விடுதலைப்புலிகள் சார்பாக சங்கொலிக்கு வந்த வாழ்த்து கடிதத்தை வாசித்து தன் பேச்சை நிறைவு செய்தார்.

-தொகுப்பு: தாஸ்

ush5

Source link