மயாமி: அமெரிக்காவில் 39 நாள் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடரில் 48 அணிகள் மோத, 104 போட்டிகள் நடந்தன. மெஸ்ஸி, நெய்மர், ரொனால்டோ ஆட்டம், அதிர்ச்சி தந்த தோல்விகள், ‘வார்’ சர்ச்சை, ரசிகர்கள் கொண்டாட்டம் என பல்வேறு நினைவுகளுடன் விடைபெற்றது.
‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா என முதன் முறையாக, மூன்று நாடுகளில் நடந்தன. 39 நாள் நடந்த இத்தொடரில் முதன் முறையாக அதிகபட்சம் 48 அணிகள் பங்கேற்றன.
இதனால் லீக் சுற்றில் பல்வேறு போட்டிகள் ஒருதலைப் பட்சமாக அமைந்தன. இருப்பினும் முதன் முறையாக களமிறங்கிய கேப் வெர்டே, குராசோ போன்ற அணிகள் வரலாறு படைத்தன. ஸ்பெயினுக்கு எதிராக ‘டிரா’ செய்த கேப் வெர்டே, அர்ஜென்டினாவுக்கு எதிரான ‘ரவுண்டு-32’ போட்டியில் போட்டியை கூடுதல் நேரம் கொண்டு சென்று, அச்சத்தை ஏற்படுத்தியது. 40 வயது கோல் கீப்பர் வோசின்யா, திடீர் நட்சத்திரமாக ஜொலித்தார்.
குராசோ நம்பிக்கை
குராசோ அணி லீக் சுற்றின் கடைசி போட்டி வரை, அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைத்து, போராடி வெளியேறியது. காங்கோ அணியும் ‘ரவுண்டு-32’ சுற்றில் இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்தது, சிறிய அணிகளும் உலக அரங்கில் சவால் கொடுக்க முடியும் என நிரூபித்தன.
எனினும், அர்ஜென்டினா, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து அணி ‘டாப்-4’ அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேற முடிந்தது.
அதிக கோல்
ஒவ்வொரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் கோல் மழை பொழிந்து, ‘கோல்டன் பூட்’ பந்தயத்தில் முந்தினர். பிரான்சின் எம்பாப்வே அதிகபட்சம், 10 கோல் அடித்தார். மெஸ்ஸி (8), இங்கிலாந்தின் பெல்லிங்காம் (7), நார்வேயின் எர்லிங் ஹாலண்ட் (7), இங்கிலாந்தின் ஹாரி கேன் (6), பிரான்சின் டெம்பலே (6) என ஒவ்வொருவரும் மிரட்டினர்.
ரொனால்டோ சோகம்
ஆறாவது முறையாக உலக கோப்பை தொடரில் களமிறங்கிய போர்ச்சுகலின் ரொனால்டோ, தனது அணியை காலிறுதிக்கு கூட கொண்டு செல்ல முடியவில்லை. அதேநேரம், 2024ல் யூரோ கோப்பை வெல்ல பெரிதும் உதவிய ஸ்பெயினின் இளம் வீரர் லமின் யமால், அசத்தினார். காயத்தில் இருந்து மீண்ட இவர், ஸ்பெயின் பைனலுக்கு முன்னேற உதவினார்.
‘வார்’ சர்ச்சை
‘வார்’ (வீடியோ அசிஸ்டன்ட் ரெப்ரி’) முறை சர்ச்சைகளின் மையமாக இருந்தது. ஜெர்மனி, குரோஷியா, எகிப்து அணிகள் முக்கிய நேரத்தில் அடித்த கோல்களை ரத்து செய்தது.
‘ரவுண்டு-16’ சுற்றில் 0-2 என பின்தங்கி இருந்த அர்ஜென்டினா, 3-2 என வென்றது. இப்போட்டியில் தரப்பட்ட தீர்ப்புகள் குறித்து எகிப்து பயிற்சியாளர் ஹொசம் ஹாசன், கொதிப்பு அடைந்தார்.
பந்தில் பொருத்தப்பட்டு இருந்த அதிநவீன ‘சென்சார் சிப்’, போர்ச்சுகலுக்கு எதிரான போட்டியில் குரோஷிய வீரர் ஜோஸ்கோ அடித்த கோல், ‘ஆப் சைடு’ என துல்லியமாக கண்டறிந்தது.
ரசிகர்கள் கிண்டல்
ஒவ்வொரு போட்டியிலும் 23 நிமிடத்துக்கு ஒரு முறை விடப்பட்ட இடைவேளையை, ரசிகர்கள் கிண்டல் செய்தனர். கோடை வெப்பத்தை தணிப்பதற்கு என கூறப்பட்டாலும், வானிலை எப்படி இருந்தாலும் இடைவேளை தொடர்ந்தது. இதனால், போட்டியில் தங்களது திட்டமிடுதலை மாற்றிக் கொள்வதற்கான ஆலோசனைக்கு, இதை அணிகள் பயன்படுத்தின. ஒளிபரப்பாளர்கள் விளம்பர வாய்ப்பாக பயன்படுத்தினர்.
பயண கட்டுப்பாடு
அமெரிக்காவில் நிலவிய பயண கட்டுப்பாடு காரணமாக அதிகமான ரசிகர்கள் வர முடியவில்லை. தவிர, போட்டி நடந்த மைதானங்களை சுற்றியும் கடுமையான குடியேற்றச் சட்ட அமலாக்க நடவடிக்கை பாயும் என மனித உரிமை அமைப்புகள் அஞ்சின.
திரும்பிய ‘ரெட்’
அமெரிக்க வீரர் பாலோகனுக்கு தரப்பட்ட ‘ரெட் கார்டு’, அதிபர் டிரம்ப் தலையீடு காரணமாக, ஒரு ஆண்டுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது பெரும் விவாதத்தை கிளப்பியது. எனினும் ‘ரவுண்டு-16’ போட்டியில் அமெரிக்கா, பெல்ஜியத்திடம் வீழ்ந்தது, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
ஒருவழியாக, 39 நாளில் நடந்த 104 விறுவிறுப்பான போட்டிகள், கால்பந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சி, அதிர்ச்சி, வியப்பு என பல்வேறு நினைவுகளை தந்து விடைபெற்றது.
ஈரானுக்கு தொல்லை
மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக ஈரான் அணி, இத்தொடரில் பங்கேற்பது உறுதியில்லாமல் இருந்தது. கடைசியில் களமிறங்கிய ஈரான் அணிக்கு கடும் நெருக்கடி தரப்பட்டன. வேறு வழியில்லாத நிலையில் அமெரிக்காவின் அரிசோனாவில் இருந்து, தங்களது பயிற்சி முகாமை, மெக்சிகோவுக்கு ஈரான் மாற்றியது.
அணியின் பல உறுப்பினர்களுக்கு ‘விசா’ வழங்க மறுத்தது அமெரிக்கா. போட்டி முடிந்த உடனே, அமெரிக்காவை விட்டு கிளம்ப வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டனர்.
லீக் சுற்றுடன் ஈரான் திரும்பிய போது, அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரி மார்க்வெய்ன் முல்லின்,’ இனி அவர்கள் திரும்ப வராதது எனக்கு மகிழ்ச்சி,’ என பேசியது சர்ச்சை கிளப்பியது.
