4 ஆண்டுகளில் 38 கிலோ, ஜென்சி நடிகையாக மாறிய குஷ்பு; எடை குறைத்த ரகசியம் இதூனாம்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளவர் நடிகை குஷ்பு. நடிப்பு மட்டும் இல்லாமல், அரசியலிலும் தனக்கான தனி இடத்தை பிடித்தள்ள இவர், கடந்த சில வருடங்களாக மேற்கொண்டு வரும் மேக்ஓவர் (தோற்ற மாற்றம்) அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நான்கே வருடங்களில் குஷ்பூ 38 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.

குஷ்பூவின் மிக சமீபத்திய புகைப்படங்கள் தான் இப்போது வைரலாகி வருகின்றன. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் “இது பழைய குஷ்பூ தானா?” என்று ரசிகர்கள் வியப்புடன் கேட்டு வருகின்றனர். அதே சமயம், தனது உடல் எடைக் குறைப்புப் பயணம் குறித்து சில மாதங்களுக்கு முன்பு குஷ்பூ மனம் திறந்து பேசியுள்ளார். அதில், “உங்கள் வயதுக்கு ஏற்ற சரியான உடல் எடையைப் பராமரிப்பது மிகவும் முக்கியம். எனக்கு 55 வயதாகிறது, 

தற்போது எனக்கு ரத்த அழுத்தமோ (பிபி) அல்லது சர்க்கரை நோயோ இல்லை. ஆனால் என் தாயாருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. அதனால் எனக்கும் அது வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒற்றைத் தலைவலி (Migraine) மற்றும் சைனஸ் பிரச்சனைகள் எனக்குப் பெற்றோர் வழியில் பரம்பரையாக வந்துள்ளன, எனவே ரத்த அழுத்தம் வந்துவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கும் போது என் எடை 98 கிலோவாக இருந்தது. ஒரு பெரிய வீட்டில் தான் அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. படிகள் ஏறும் போதும் ஓடும் போதும் எனக்குக் கடுமையான முழங்கால் வலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களில் என் முகத்தின் அளவைப் பார்க்கும் போது எனக்கு பயமாக இருக்கும்.

சர்க்கரை நோய் மற்றும் முழங்கால் வலியைத் தடுப்பதற்காக உடல் எடையைக் குறைக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தினர். “கொரோனா காலத்தில் தான் நான் எனது எடைக் குறைப்புப் பயணத்தைத் தொடங்கினேன். தற்போதைய எடையை அடைய எனக்கு நான்கு ஆண்டுகள் ஆனது. எனது உணவில் இருந்து குளுட்டனை (Gluten) தவிர்த்தேன். மைதாவோ, சப்பாத்தியோ இப்போது என் உணவில் இல்லை. குளுட்டனைத் தவிர்த்த பிறகு, நானும் என் மகளும் வேகமாக எடையைக் குறைக்கத் தொடங்கினோம்.

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வது மிகவும் முக்கியமான விஷயம். “சினிமாவிற்கு வரும்போது நான் ஒல்லியாக இருந்தேன், அப்போது ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள். எனக்கு உடல் எடை கூடியபோது சில விமர்சனங்கள் எழுந்தாலும், ரசிகர்கள் அப்போதும் என் மீது அன்பு காட்டினார்கள். இன்னும் சில காலம் செல்லும்போது மக்கள் எனது இந்த புதிய தோற்றத்தையும் ஏற்றுக்கொள்வார்கள் என்று எனக்கு உறுதியாகத் தெரியும்,” என்று குஷ்பு கூறியுள்ளார்.



Source link