”4 மனைவிகள்… 70 குழந்தைகள்…!”; வறுமையால் முடங்கிய குடும்பம்

இது முன்பே தெரிந்திருந்தால் இத்தனை குழந்தைகளைப் பெற்றிருக்க மாட்டேன் என முதியவர் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  

ஆப்கானிஸ்தானில், மக்கள் தற்போது பல நெருக்கடியான சவால்களைச் சந்தித்து வருகின்றனர். அந்நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் உணவுக்கே அல்லாடும் சூழலும் நிலவுகிறது. இந்த சூழலில், முகமது சாதெக் என்ற 57 வயது நபர், தனது 4 மனைவிகள் மூலம் மொத்தம் 70 குழந்தைகளைப் பெற்றெடுத்து, தற்போது கடுமையான வறுமையில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ள சம்பவம் உலக அளவில் வைரலாகி வருகிறது. 

இது குறித்து பிரபல ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ”எனக்கு 4 மனைவிகள் மற்றும் 70 குழந்தைகள். நான் கார்களை விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறேன். ஒரு கார் விற்றால் மட்டுமே எனக்கு 1000 ஆப்கானிகள் (15 டாலர்) கிடைக்கும். இந்த சொற்ப வருமானத்தை வைத்து என்னால் குடும்பத்தை நடத்த முடியவில்லை. இதனால், எனது குடும்பம் கடுமையான வறுமையில் சிக்கித் தவிக்கிறது. 

சமையலுக்கு விரகு வாங்கக் கூட பணமில்லாமல் காகிதத்தை வைத்து அடுப்பை எரிக்கிறோம். பல நேரங்களில் உணவில்லாமல் எனது குழந்தைகள் கடுமையான பசியால் வாடுகின்றன. அவர்களுக்கு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டால் கூட மருத்துவம் பார்க்க வழியில்லை. இதன் காரணமாகவே, நோய் தாக்குதலுக்கு உள்ளான பல குழந்தைகள் இறந்துவிட்டன. தற்போது 58 குழந்தைகள் மட்டுமே உயிருடன் இருக்கிறார்கள்.  

இந்த குழந்தைகளுக்குக் காலணிகள் கூட வாங்கித் தர முடியாத நிலையில் இருப்பதால், அவர்கள் வெறும் கால்களுடன் நடந்து செல்கின்றனர். அவர்களுக்கு மூன்று வேளை உணவு கொடுப்பதற்குக் கூட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. என் குடும்பத்திற்கு இவ்வளவு பெரிய உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்று தெரிந்திருந்தால், நான் இத்தனை குழந்தைகளைப் பெற்றிருக்க மாட்டேன்” என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.