40 ஆண்டுக்குப் பின்… கோவையில் அரங்கேறும் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் சதுரங்கப் போட்டி

தமிழ்நாடு சதுரங்க சங்கம் சார்பில், இன்டர்நேஷனல் கிராண்ட்மாஸ்டர் ஓபன் செஸ் போட்டி 2027 அறிமுக நிகழ்ச்சி கோவை சாய்பாபா கோவில் அருகே உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியின் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய போட்டி ஒருங்கினைப்பாளர்கள், “சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில், மீண்டும் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் ஓபன் சதுரங்கப் போட்டி நடைபெற உள்ளது.  

மிராக்கிள் ஸ்கூல் ஆஃப் செஸ் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட சதுரங்கச் சங்கம், இணைந்து, அக்ஷயா பொறியியல் கல்லூரியின் தலைப்பின் அனுசரணையில், இப்போட்டி 2027 ஜனவரி 11 முதல் 18 வரை நடைபெறுகிறது. 1987-ஆம் ஆண்டு கோவையில், நடைபெற்ற சக்தி சுகர்ஸ் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் போட்டிக்குப் பிறகு நடைபெறும் முதல்  போட்டியாக இது அமைகிறது. போட்டியில் A, B, C, D என நான்கு பிரிவுகள் இடம்பெறுகின்றன. மொத்தம் ரூ. 45 லட்சம் ரொக்கப் பரிசுத் தொகையுடன், 2 புதிய கார்கள், 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 செஸ் கடிகாரங்கள் சிறப்பு பரிசுகளாக வழங்கப்படுகின்றன.  

இந்தப் போட்டியில் கலந்து கொள்ள, 25-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், 40 முதல் 45 கிராண்ட்மாஸ்டர்கள் மற்றும் சர்வதேச மாஸ்டர்கள் பங்கேற்பார்கள். சுமார் 2,000 வீரர்கள் கலந்து கொள்வார்கள். இந்த சர்வதேச போட்டி, இந்திய இளம் வீரர்கள் கிராண்ட்மாஸ்டர், சர்வதேச மாஸ்டர், நார்ம்களைப் பெற சிறந்த வாய்ப்பை வழங்குவதுடன், தமிழகத்தில் சதுரங்க வளர்ச்சிக்கு மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்” என்று கூறினர். 

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் பேசுகையில், “40 ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில்  மீண்டும் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் சதுரங்கப் போட்டி நடைபெறுவது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். சதுரங்கம் மாணவர்களின் சிந்தனைத் திறன், ஒழுக்கம் மற்றும் முடிவெடுக்கும் திறனை வளர்க்கும் சிறந்த விளையாட்டு. இந்தப் போட்டி தமிழக இளம் வீரர்களுக்கு உலகத் தரத்தில் தங்களை நிரூபிக்க சிறந்த வாய்ப்பாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.

செய்தி: பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்.

Source link