நமது சிறப்பு நிருபர்
576 இந்தியர்கள் ஆண்டுக்கு ரூ. 100 கோடிக்கு மேல் சம்பாதிக்கின்றனர்; 5 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 300% அதிகரித்துள்ளது என பார்லிமென்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் அதிகரித்து வருகிறது. மத்திய நிதி அமைச்சகம் பகிர்ந்த தரவுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து பார்லிமென்டில் கேள்விக்கு, நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறியிருப்பதாவது:
* ஆண்டுக்குக் குறைந்தது ரூ.100 கோடி சம்பாதிக்கும் தனிநபர்களின் எண்ணிக்கை 2021ம் ஆண்டிலிருந்து 300%க்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்த அபார வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளது.
* ஆண்டு வருமானம் ரூ.100 கோடி அல்லது அதற்கு மேல் ஈட்டுவதாகத் தெரிவிக்கும் தனிநபர்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது. 2024-25ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 415 ஆக இருந்தது.
* ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 2021-22ம் ஆண்டில், வெறும் 142 வரி செலுத்துவோர் மட்டுமே குறைந்தபட்சம் ரூ. 100 கோடி ஆண்டு வருமானத்தை ஈட்டி வந்தனர்.
* 2021-22ம் ஆண்டில் 142 ஆக இருந்த எண்ணிக்கை, 2022-23ம் ஆண்டில் 301 ஆக உயர்ந்து, பின்னர் 2023-24ம் ஆண்டில் 284 ஆக சரிந்தது. அதன் பிறகு, 2024-25ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 415 ஆக மீண்டும் அதிகரித்தது. 2025-26ம் ஆண்டில் மேலும் அதிகரித்து 576 ஆனது.
* கோடீஸ்வரர்களின் பணம் குறித்த தரவுகளை அரசு பராமரிப்பதில்லை.
* 2013-14 மற்றும் 2022-23ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 24.82 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
