தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ச்சியாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நேற்று இரவு (20.10.2026) முழுவதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை மற்றும் அதி கனமழை பெய்தது. இதனால் சாலையில் வெள்ளம், கடும் போக்குவரத்து நெரிசல், மழை நீருடன் கழிவுநீர் கலப்பு ஏற்பட்டது. இதனை சீர்செய்யும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (21.10.2026) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீவிரமடைந்து வரும் மழைப் பொழிவைக் கருத்தில் கொண்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (21.10.2026) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இதுவரை விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
