5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட்; தமிழகம் முழுவதும் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை: தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய வளி மண்டல சுழற்சி, நேற்று காலையில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இது, நாளை மறுநாள் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலெர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக, விருதுநகர் மாவட்டம் சாத்துாரில் 16 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, விருதுநகர் மாவட்டம் சின்னகாமன்பட்டியில் 14; திண்டுக்கல் மாவட்டம் சமுத்திராப்பட்டியில் 13; கடலுார் மாவட்டம் குப்பநத்தம், விருத்தாசலம், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி, திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதிகளில் தலா 11 செ.மீ., மழை பெய்துள்ளது.

‘ஆரஞ்சு அலெர்ட்’

தென் கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி, நேற்று காலை நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இது, அதே பகுதியில் தொடர்வதுடன், இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். அதன் பின், இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலு வடைய வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் காலையில், இந்த அமைப்பு மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது. புயலாக வலுவடைந்த பின், இது வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிஷா கடற்கரையை நோக்கி நகர்ந்து செல்லக்கூடும்.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிக கன மழை பெய்யக்கூடும். இதற்கான, ‘ஆரஞ்சு அலெர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பெரம்பலுார், அரியலுார், திருவண்ணாமலை, வேலுார், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை , கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிவகங்கை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருப்பத்துார், தர்மபுரி, ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சூறாவளி காற்று

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒருசில இடங்களில் மிதமான மழை அல்லது கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடலின் பெரும்பாலான பகுதிகள், தென் கிழக்கு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் இன்று மணிக்கு அதிகபட்சமாக 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link