மலையாளத்தி பிரபல நடிகையாக வலம் வருபவர் அனுமோல். ஆனால் தமிழில் தான் தனது கரியரை ஆரம்பித்தார். பின்பு மலையாளத்தில் தொடர்ச்சியாக படங்கள் பண்ணி அவ்வபோது தமிழிலும் நடித்து வருகிறார்.
இவர் தற்போது ஒரு பெண் குழுவுடன் இணைந்து நடந்து முடிந்த விஜய் தசமி நாளில் 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார். மேலும் அவர்களுடன் மனம் விட்டு உரையாடியும் உள்ளார். இது தொடர்பாக நெகிழ்ச்சியுடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்வதில் நான் மிகுந்த மனநிறைவும் மகிழ்ச்சியும் அடைகிறேன். என்னை நேசிக்கும், பெண்கள் குழு ஒன்று, விஜயதசமி நன்னாளில் ஒரு அழகான முன்னெடுப்பிற்காக ஒன்றிணைந்தார்கள்.
நாங்கள் 50 பெண்களுக்கு முதலுதவி பெட்டிகள், தண்ணீர் பாட்டில்கள், சானிட்டரி பேட்கள் மற்றும் பவர் பேங்குகளை வழங்கினோம். ஆதரவு தேவைப்பட்ட இந்தப் பெண்களைக் கண்டறிய எங்களுக்கு உதவிய ‘வீர முன்னேற்றப் பெண்கள்’ குழுவைச் சேர்ந்த ராஜி மற்றும் பவானி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். இது மிகவும் அன்பான, கருணை நிறைந்த ஒரு சந்திப்பாக இருந்தது. நம் ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கையில் போராட்டங்கள் இருக்கிறது, நாங்கள் எங்கள் கதைகளைப் பகிர்ந்துகொண்டபோது, ​​ஒரு நெருக்கமான குடும்பத்தைப் போலவே உணர்ந்தோம். இவர்கள் அனைவரும் தங்கள் குடும்பங்களுக்காகக் கடுமையாக உழைக்கும்’சூப்பர் வுமன்’கள்.
நிதி சுதந்திரம், ஆரோக்கியம், கல்வி ஆகியவற்றின் முக்கியத்துவம், நமது உரிமைகளை அறிந்துகொள்ளுதல், சரியானவற்றிற்காகக் குரல் கொடுக்கும் துணிச்சல் மற்றும் தவறானவற்றை எதிர்க்கும் மன உறுதி போன்ற முக்கியமான விஷயங்கள் குறித்து நாங்கள் பேசினோம். மேலும், எந்தவித பாகுபாடுமின்றி நல்ல மனிதர்களாக வாழ்வது குறித்தும், மற்றவர்களுக்குத் துன்பமோ இடையூறோ செய்யாமல் நமக்கான மகிழ்ச்சியையும் அமைதியையும் கண்டடைவது குறித்தும் உரையாடினோம். நிறைய நன்றியுணர்வு, மகிழ்ச்சி மற்றும் மனநிறைவுடன் நான் வீடு திரும்பினேன். சில சமயங்களில், நாம் என்ன கொடுக்கிறோம் என்பது மட்டும் முக்கியமானது அல்ல, நாம் பகிர்ந்துகொள்ளும் அன்பு, புரிதல் மற்றும் ஒருவருக்கொருவர் சார்ந்திருக்கும் உணர்வுமே மிக முக்கியமானது. இந்த நாளைச் சிறப்பானதாக மாற்றிய ஒவ்வொரு பெண்ணுக்கும் நன்றி. பெண்கள் பெண்களுக்கு ஆதரவளிப்பதற்கும், இணைந்து வளர்வதற்கும், இந்த உலகத்தை இன்னும் கொஞ்சம் அன்பான இடமாக மாற்றுவதற்கும் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
