6 ஆண்டுக்கு பின் திறக்கப்படும் நாது லா கணவாய்; சீனாவுடன் மீண்டும் தொடங்குகிறது எல்லை வர்த்தகம்

புதுடில்லி: வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், ஆறு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த நாது லா கணவாய், ஆக., 1ல் திறக்கப்படுகிறது. இதன் மூலம், இந்தியா – சீனா இடையே எல்லை தாண்டிய வர்த்தகம் மீண்டும் தொடங்கவுள்ளது.

இந்தியா – சீனா இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்னை நிலவுகிறது. 2020ல், கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவத்தினர் அத்துமீறினர்.

உறவில் இணக்கம்

இதனால், நம் ராணுவத்தினருக்கும், சீன ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இரு தரப்பிலும் உயிர்சேதம் ஏற்பட்டது.

இதையடுத்து, இரு தரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு சீனாவுக்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்து பேசினார். தொடர்ந்து, இரு தரப்பு உறவில் இணக்கம் ஏற்பட்டது.

எல்லையில் குவிக்கப்பட்ட இருதரப்பு வீரர்கள் திரும்ப பெறப்பட்டு, பேச்சு நடந்தது. இதற்கிடையே, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கைலாஷ் மானசரோவர் யாத்திரை, நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், சிக்கிமில் ஆறு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த நாது லா கணவாய், ஆக., 1ல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம், இந்தியா – சீனா இடையே எல்லை தாண்டிய வர்த்தகம் நடக்கவுள்ளது.

கிழக்கு இமயமலையில், 14,140 அடி உயரத்தில் அமைந்துள்ள நாது லா கணவாய், நம் நாட்டின் சிக்கிமையும், திபெத்தின் சும்பி பள்ளத்தாக்கையும் இணைக்கும் பழமையான மலைப்பாதைகளில் ஒன்று.

காங்டாக்கில் இருந்து, 54 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள இது, ஒரு காலத்தில் பண்டைய பட்டுப் பாதையின் முக்கிய கிளை பாதையாக இருந்தது.

இது, நுாற்றாண்டுகளாக இந்தியாவுக்கும், திபெத்துக்கும் இடையே வர்த்தகர்கள், யாத்ரீகர்கள் மற்றும் வணிகக் குழுக்களின் இயக்கத்திற்கு உதவியது.

கடந்த, 1962ல் இந்தியா – -சீனா போருக்கு பின், நாது லா கணவாய் வழியாக நடந்த வர்த்தகம் தடைபட்டு, பின் மூடப்பட்டது. தொடர்ந்து, 2006 ஜூலை 6ல் இந்த கணவாய் மீண்டும் திறக்கப்பட்டது. எனினும், கல்வான் பள்ளத்தாக்கு மோதலை தொடர்ந்து, 2020ல் மூடப்பட்டது.

பாரம்பரிய தயாரிப்புகள்

தற்போது, ஆக., 1ல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சிக்கிம் அதிகாரிகள் செய்து வருகின்றனர். எல்லை பகுதி பொருளாதாரம் மீண்டும் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கையில் வர்த்தகர்களும், உள்ளூர் வணிகர்களும் உள்ளனர்.

வழக்கமான சர்வதேச வர்த்தகத்தை போலல்லாமல், நாது லா கணவாய் வழியாக செய்யப்படும் எல்லை வர்த்தகம் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட அனுமதிக்கப்பட்ட பொருட்களின் பட்டியலின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

விவசாயக் கருவிகள், போர்வைகள், ஜவுளிகள், தேயிலை, காபி, சமையல் எண்ணெய், மிதிவண்டிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை நம் நாடு ஏற்றுமதி செய்துள்ளது.

திபெத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் மூல கம்பளி, ஆட்டுத் தோல், மருத்துவ மூலிகைகள், கம்பளங்கள் மற்றும் பிற பாரம்பரிய தயாரிப்புகள் அடங்கும்.

Source link