7 வயது சிறுவன் மரணத்தில் அதிர்ச்சி திருப்பம் – 10 வயது மகனுடன் தாய் கைது

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கீழவளவு அருகேயுள்ள தனியாமங்கலம் கிராமத்தை சேர்ந்த பெரியகருப்பன்- சத்யா தம்பதியின் மகன் முத்துவேல் (வயது 7) நேற்று முன்தினம் விளையாட சென்ற திடீரென மாயமானான்.

பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் அவரது தாய் சத்யா கீழவளவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே மாயமான சிறுவன் முத்துவேல் நேற்று மதியம் அதே பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த ஓடு வேயப்பட்ட வீட்டில் பிணமாக மீட்கப்பட்டான். அப்போது சிறுவனின் கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்டதற்கான அடையாளமும், பல் உடைந்தும், உடலில் பல இடங்களில் காயங்களும் இருந்தன.

எனவே சிறுவன் முத்துவேல், மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் முதல்கட்ட விசாரணையை தொடங்கினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து இன்று காலை கீழவளவு போலீஸ் நிலையத்தில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சிறுவர்கள் விளையாடிக்கொண்டு இருந்தபோது ஏற்பட்ட விபரீதத்தில் முத்துவேல் இறந்துள்ளதாக தெரிவித்தார்.

அதுபற்றிய விபரம் வருமாறு:-

நேற்று முன்தினம் சிறுவன் முத்துவேல், தனது தாய் விவசாய கூலி வேலைக்கு சென்றதும் அதே பகுதியில் விளையாட சென்றார். அப்போது அங்கு தனது உறவினரான பாண்டிமுனி-சந்தியா தம்பதியின் 10 வயது மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

அதே சமயத்தில் முத்துவேலின் கழுத்தில் கயிறை கட்டி 10 வயது சிறுவன் இழுத்துள்ளான். இதில் கயிறு கழுத்தை இறுக்கியதால் முத்துவேல் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவரது பல் உடைந்ததுடன், உடலிலும் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் விழுந்த இடத்தில் இருந்து எழுந்திருக்காமல் முத்துவேல் அப்படியே கிடந்துள்ளார்.

இதையடுத்து 10 வயது சிறுவன் தனது தாயிடம் சென்று நடந்ததை கூறியுள்ளான். பின்னர் அவரது தாய் சந்தியா வந்து பார்த்தபோது, முத்துவேல் பேச்சு மூச்சின்றியும், நினைவின்றியும் கிடந்துள்ளார். இதனால் பதட்டம் அடைந்த சந்தியா முத்துவேலின் மார்பில் கைவைத்து அழுத்தியும், தட்டியும் பார்த்தார். ஆனாலும் முத்துவேலிடம் இருந்து எந்தவித அசைவும் இல்லை. அவன் இறந்துவிட்டதாக நினைத்து அதனை மறைக்கவும், தன்னுடைய மகனை காப்பாற்றவும் சந்தியா திட்டமிட்டார். உடனடியாக முத்துவேலின் உடலை தூக்கிக்கொண்டு அருகிலுள்ள பாழடைந்த வீட்டில் போட்டுவிட்டு யாருக்கும் தெரியாதது போல் இருந்துவிட்டார்.

மேலும் முத்துவேலின் தாயுடன் சேர்ந்து, தானும் தேடுவது போன்று நாடகமும் ஆடியுள்ளார். போலீசார் கைப்பற்றிய சி.சி.டி.வி. கேமரா பதிவில் கடைசியாக முத்துவேல், 10 வயது சிறுவனுடன் விளையாடிய காட்சி இருந்துள்ளது. அவரை அழைத்து விசாரித்தபோது உண்மையை கூறியுள்ளார். அதன்பிறகு சந்தியாவும் நடந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதன்பேரில் கீழவளவு போலீசார் முத்துவேல் இறந்ததை மறைத்து, அதற்கு உடந்தையாக இருந்ததாக சந்தியாவையும், அவரது 10 வயது மகனையும் இன்று காலை கைது செய்தனர். கைதான சிறுவன் சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே உயிரிழந்த சிறுவன் முத்துவேல் உடல் இன்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இச்சம்பவம் மதுரை மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link