75,000 வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு எஃபெக்ட்… மொத்த இனமும் காத்தோட கலந்திருச்சு; ஒரு டீம் மட்டும் தான் தப்பிச்சிருக்காங்க

ஐரோப்பாவில் வாழ்ந்த மனிதர்களின் பழங்கால மூதாதையர்களான ‘நியாண்டர்தால்கள்’ (Neanderthals), தாங்கள் அழியும் காலம் வரை ஐரோப்பியக் கண்டம் முழுவதும் ஆங்காங்கே பலதரப்பட்ட மரபணு குழுக்களாக வாழ்ந்து வந்ததாகவே நீண்ட காலமாக நம்பப்பட்டது. ஆனால், தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய டி.என்.ஏ (DNA) ஆதாரங்கள் முற்றிலும் மாறுபட்ட, ஒரு அதிர்ச்சியூட்டும் வரலாற்றைக் கூறுகின்றன.

ரூ.26 லட்சம் நாசமா போச்சு: இந்தியர்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்ட கனடா; நடுத் தெருவில் நிற்கும் மாணவர்கள்

சுமார் 75,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு கடுமையான மக்கள் தொகை வீழ்ச்சி  காரணமாக, நியாண்டர்தால்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாகச் சுருங்கி, பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் இருந்த ஒரே ஒரு சிறிய குழு மட்டுமே தப்பிப்பிழைத்தது என்ற உண்மை தெரியவந்துள்ளது. அந்த ஒரு குழுவிலிருந்து உருவான சந்ததியினர்தான் பின்னர் ஸ்பெயின் முதல் காகசஸ் வரை ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் மீண்டும் பரவியுள்ளனர். 

பனி யுகத்தின் கோரத்தாண்டவம் 

ஜெர்மனியின் டூபிங்கன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோசிமோ போஸ்த் தலைமையிலான குழு இந்த ஆராய்ச்சியை நடத்தியது. சுமார் 75,000 ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான பனி யுகச் சூழல் ஏற்பட்டபோது, ஐரோப்பாவில் நியாண்டர்தால்கள் வாழ்ந்த இடங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து, அவர்கள் தென்மேற்கு ஐரோப்பாவிற்குள் மட்டும் முடங்கினர்.

அதே காலகட்டத்தில் அவர்களின் மரபணு பன்முகத்தன்மையும் கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இது ஒரு உண்மையான ‘பாட்டிலேக்’ (Bottleneck – மக்கள் தொகை மிகக் கொடூரமாகச் சுருங்கும் ஒரு ஆபத்தான கட்டம்) தருணமாகும். இந்த நெருக்கடிக்குப் பிறகு, சுமார் 65,000 ஆண்டுகளுக்கு முன்பு, பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் தப்பிப்பிழைத்த அந்த ஒரே ஒரு குழுவிலிருந்து புதிய நியாண்டர்தால் இனம் தோன்றி, மீண்டும் ஐரோப்பா முழுவதும் பரவத் தொடங்கியது. இதனால்தான் பிற்கால நியாண்டர்தால்கள் எங்கு வாழ்ந்திருந்தாலும், அவர்கள் அனைவரிடமும் ஒரே மாதிரியான மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ (Mitochondrial DNA) பரம்பரை காணப்படுகிறது.

இந்த ஆராய்ச்சி எப்படி நடத்தப்பட்டது?

செல்களுக்குள் ஆற்றலை உருவாக்கும் மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ-வை நியாண்டர்தால்களின் பற்கள் மற்றும் எலும்புகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் பிரித்தெடுத்தனர். ஆய்வின் முதன்மை ஆசிரியரான சாருலா ஃபோட்டியாடோ கூற்றுப்படி, முழு மரபணுவை  விட இதில் தகவல்கள் குறைவு என்றாலும், இந்த டி.என்.ஏ சிதையாமல் நீண்ட காலம் அழியாமல் இருக்கும் என்பதால், சிதைந்த பழைய எச்சங்களில் இருந்து இதை எடுப்பது எளிது.

பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் செர்பியா ஆகிய நாடுகளில் உள்ள 6 தொல்பொருள் தளங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 10 புதிய நியாண்டர்தால்களின் டி.என்.ஏ வரிசைப்படுத்தப்பட்டது. இது ஏற்கனவே வெளியிடப்பட்ட 49 நியாண்டர்தால் மாதிரிகளுடன் ஒப்பிடப்பட்டது. இந்த மரபணு முடிவுகள் ‘ரோட்’ என்ற தொல்பொருள் தரவுத்தளத்துடன் ஒப்பிடப்பட்டு, அவர்கள் எப்போது, எங்கு வாழ்ந்தார்கள் என்பது துல்லியமாக வரைபடமாக்கப்பட்டது.

அழிவுக்கு முன் ஏற்பட்ட இரண்டாவது பெரிய வீழ்ச்சி

நியாண்டர்தால்கள் முற்றிலும் அழிந்து போவதற்குச் சற்று முன்பாக, அதாவது சுமார் 45,000 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் ஒரு கடுமையான மக்கள் தொகை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளனர். சுமார் 42,000 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் எண்ணிக்கை வரலாற்றிலேயே மிகக் குறைந்த மட்டத்தைத் தொட்டது, அதன் பிறகு அந்த இனமே பூமியிலிருந்து முற்றிலுமாக விடைபெற்றது.

Source link