93 சதவீதம்! 543 புற்றுநோய் மருந்துகளின் விலை குறைந்தது: தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அதிரடி

புதுடில்லி: புற்றுநோய் சிகிச்சைக்கான, 543 வகை மருந்துகளின் அதிகபட்ச சில்லரை விலையை என்.பி.பி.ஏ., எனப்படும், தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் திருத்தியமைத்துள்ளது.

இதனால், சில மருந்துகளின் விலை 93 சதவீதம் வரை குறைந்துள்ளது. இந்த திருத்தம், அடுத்த மாதம் 9ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மருந்துகளின் விலை நிர்ணயம் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இது தொடர்பான விசாரணையின் போது, ‘புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் அதிகபட்ச சில்லரை விலையில் வணிக லாப வரம்பை 30 சதவீதமாக நிர்ணயிப்பது தொடர்பாக மத்திய அரசு பதிலளித்தது. இதில் அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம், ‘மற்ற மருந்துகளுக்கும் வணிக லாப வரம்பை நிர்ணயிக்க முடியாதா?’ என, கேள்வி எழுப்பியது.

இந்த வழக்கு, நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லரை விலைக்கும், மருந்து கடைகளுக்கு அவை விற்பனை செய்யப்படும் விலைக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமாக ஒட்டுமொத்த மருத்துவ துறையும் செயல்படுகிறதா?’ என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், புற்றுநோய் சிகிச்சைக்கான, 543 வகை மருந்துகளின் அதிகபட்ச சில்லரை விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் நேற்று திருத்தியமைத்துள்ளது.

30 சதவீதம்

அதன்படி, முக்கிய மருந்துகளின் விலை 70 முதல் 93 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளன. மார்பக புற்றுநோய்க்கான, ‘பால்போசிக்லிப்’ மருந்தின் ஒரு பிராண்டின் பாக்கெட் விலை, 40,421 ரூபாயில் இருந்து 2,720 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

‘கீமொதெரபி’ சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும், ‘தியோடெபா’ மருந்தின் ஒரு குப்பி விலை, 80,072 ரூபாயில் இருந்து 7,150 ஆக குறைந்துள்ளது. ‘டசாடினிப், லென்வாடினிப், அபிராடெரோன், ஒலாபரிப்’ உள்ளிட்ட மருந்துகளின் விலையும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் மருந்துகளின் விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்களின் வர்த்தக லாப வரம்பை, அதிகபட்ச சில்லரை விலையில் 30 சதவீதமாக நிர்ணயிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட விலைகள், அடுத்த மாதம் 9ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ‘கீட்ரூடா’ மருந்தின் விலை ஒரு குப்பிக்கு, 2,16,500 ரூபாய் என்ற நிலை தொடர்கிறது. மார்பகப் புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் ‘ரிபோக்சிக்லிப்’ மருந்தின் விலையும், 24,435 ரூபாயாக நீடிக்கிறது. ‘டாக்ரிசோ, டெசென்ட்ரிக், டார்சலெக்ஸ், இம்பின்ஸி’ உள்ளிட்ட சில முக்கிய மருந்துகளின் விலையிலும் மாற்றமில்லை.

இந்த விலை குறைப்பு வாயிலாக, புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆண்டுக்கு 2,500 கோடி ரூபாய வரை மருத்துவ செலவு மிச்சமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கதிர்வீச்சு சிகிச்சை

புற்றுநோய் சிகிச்சையில் மருந்துகள் மட்டுமின்றி அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, பரிசோதனைகள், மருத்துவமனை செலவுகள் என பல்வேறு செலவுகள் ஏற்படுகின்றன.

எனவே, மருந்துகளின் விலை குறைப்பு, நோயாளிகளின் மொத்த சிகிச்சை செலவை குறைக்குமா என்பது விலை குறைப்பின் பலன் அவர்களுக்கு கிடைப்பதை பொறுத்தே அமையும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

Source link