99% முடிந்த வர்த்தக ஒப்பந்தம்; விசா கட்டுப்பாடுகள் இந்தியாவை தண்டிக்க அல்ல: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பேட்டியில் உண்மையை உடைத்த மார்கோ ரூபியோ

எழுதியவர்: சுபஜித் ராய்

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ செவ்வாய்க்கிழமை கூறுகையில், சுங்கவரிகள் இந்தியாவைத் தண்டிப்பதற்காக விதிக்கப்படவில்லை என்றும், விசா கட்டுப்பாடுகள் இந்தியாவை குறிவைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்க

‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், இந்தியா – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மிகவும் நெருக்கமாக உள்ளது என்றும் இரு நாடுகளும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறினார். அதாவது, “நாங்கள் இலக்கை நெருங்கிவிட்டோம் என்று நான் நினைக்கிறேன். நான் அதை எப்படிச் சொல்வேன் என்றால், அதை இறுதி செய்ய மாதங்கள் அல்ல வாரங்களே ஆகும்.

99% பணிகள் முடிந்துவிட்டதாக நான் நினைக்கிறேன். மீதமுள்ளவை 100% முடிவடைய வேண்டும். ஆனால், அது செல்லும் பாதையை நான் மிகவும் நேர்மறையாக உணர்கிறேன். சிக்கல் உள்ள புள்ளிகளின் விவரங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால், அது இறுதி கட்டத்தில் உள்ளது என்பதை மட்டும் என்னால் கூற முடியும். அதை நான் தொழில்நுட்ப சிக்கல்கள் என்று சொல்லமாட்டேன், ஆனால் அது மொழி தொடர்பானது. இதன் அடிப்படையில் சில வார்த்தைகள் மற்றும் சில சொற்றொடர்கள் என்ன பொருளைத் தருகின்றன என்பதைப் பொறுத்தது” என்றார்.

ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளை 100% வரை வரி விதித்து குறிவைக்கும் அமெரிக்காவின் முந்தைய முடிவு (கடந்த வாரம் அதிபர் டொனால்ட் டிரம்ப் இதற்கு விலக்கு அளித்திருந்தார்) மற்றும் அது பொருளாதார உறவுகளைப் பாதிக்குமா என்பது குறித்து ரூபியோ கூறியதாவது, “பாதிப்பை ஏற்படுத்த முடியும். அதில் எந்த சந்தேகமும் இல்லை, அதனால்தான் அதை நிர்வகிக்க வேண்டும். இது மிகவும் கவனமாக நிர்வகிக்கப்பட வேண்டும், அதனால்தான் நம்மிடம் உள்ள உறவு மிகவும் முக்கியமானது. நாங்கள் நிச்சயமாகப் பாதிக்கும் காரியங்களைச் செய்ய விரும்பவில்லை. இந்த சுங்கவரிகள் எதுவும் இந்தியாவைத் தண்டிக்கவோ அல்லது தீங்கு விளைவிக்கவோ செய்யப்படவில்லை” என்றார்.

அமெரிக்க நிர்வாகத்தின் விசா கட்டுப்பாடுகள் குறித்துப் பேசிய அவர், “சற்றும் அமல்படுத்தப்படாமல் புறக்கணிக்கப்பட்ட ஒரு குடிவரவு அமைப்பை நாங்கள் சரிசெய்ய முயற்சிக்கிறோம். இது இந்தியாவை மட்டும் குறிவைக்கவில்லை” என்றார். அமெரிக்க வெளியுறவு அமைச்சராக தனது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகாலப் பதவிக் காலத்தைத் திரும்பிப் பார்த்த ரூபியோ, இந்தியா – அமெரிக்க உறவுகள் நேர்மறையாக இருந்ததாகவும், குவாட்  அமைப்பானது இந்தியாவுடனான மிக வலுவான ஒத்துழைப்பிற்கு ஓர் எடுத்துக்காட்டு என்றும், அது எண்ணங்களைச் செயலாக மாற்றத் தொடங்கியுள்ளது என்றும் கூறினார்.

டிரம்ப் நிர்வாகம் சீனாவிடம் கண்டிப்பில்லாமல் நடந்து கொள்வதாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ”கண்டிப்பில்லாமல் சரியான சொல் அல்ல… அவர்களுடனான நமது உறவில் ஒரு மூலோபாய ஸ்திரத்தன்மையை கண்டறிய முயல்வதே இந்த நிர்வாகத்தின் அணுகுமுறையாக இருந்து வருகிறது” என்று அவர் கூறினார். அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தகப் போர், உலகப் பொருளாதாரத்தைப் பேரழிவிற்கு உட்படுத்தும் என்றும், அது இந்தியாவையும் பாதிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

பாகிஸ்தான் ஜெனரல்களுடன் டிரம்ப் நிர்வாகம் வைத்துள்ள உறவு குறித்த இந்தியாவின் கவலைகளைத் தணித்த ரூபியோ,  “இந்தியாவில் உள்ள அனைவரும் உறுதியாக நம்ப வேண்டிய விஷயம் என்னவென்றால், பாகிஸ்தானுடன் மட்டுமல்ல, உலகில் உள்ள எந்தவொரு நாடு உடனான எங்களது உறவு ஒருபோதும் மற்ற நாடுகளின் உறவைப் பாதிக்கும் வகையில் அமையாது. இந்தியாவுடனான எங்கள் உறவில் நாங்கள் அதை அவ்வாறு கருதவில்லை” என்றார்.

Source link