நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது; நிர்மலா சீதாராமன்

புதுடில்லி: நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்ய முடியாது என பாதுகாப்பு துறைக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளித்தது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்ய முடியாது. கடந்த 10 ஆண்டுகளில் செலவிடப்பட்ட பணம் எவ்வளவு உதவியாக இருந்தது என்பதை ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை எடுத்துரைத்தது. பாதுகாப்பு படை வீரர்களுக்கு அடிப்படை உபகரணங்கள் இல்லாத ஒரு காலம் இருந்தது. நமது வீரர்களுக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் கிடைக்கவில்லை. துப்பாக்கிகள் இருந்தாலும் அவர்களிடம் தோட்டாக்கள் இருக்காது. தற்போது தான் அந்த நிலை மாறி இருக்கிறது.

முரண்பட்ட கோரிக்கையை நிர்வகிப்பது என்பது ஒவ்வொரு நிதியமைச்சரும் எதிர்கொள்ளும் பிரச்னையாகும். கூடுதல் வளங்களைப் பெறுவதற்கு வரிகளை உயர்த்துவது எப்போதும் தீர்வாகாது. ஆனால் நாட்டின் தேவைகளுக்கு பணம் தேவைப்படுகிறது. உதாரணமாக கோவிட் காலத்தில் தடுப்பூசிகளை வாங்க வேண்டிய அவசியம் இருந்தபோதிலும், குடிமக்கள் மீது வரிகள் உயர்த்தப்படக்கூடாது. மக்கள் மீது ஒரு ரூபாய் வரி விதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை என்று பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டாலும் சரி இறக்குமதி செய்யப்பட்டாலும் சரி, நாம் தடுப்பூசி பெற வேண்டியிருந்தது. உயிர் காப்பாற்றப்பட வேண்டும். ஒரு ஊசிக்கு ஒரு குடிமகனை 500 ரூபாய் செலுத்தச் சொல்ல முடியாது. நெருக்கடியின் போது அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசு கணிசமாகக் கடன் வாங்க வேண்டியிருந்தது. தற்போது பொருளாதார வளர்ச்சி ஏற்பட்ட உடன் கடனைக் குறைப்பதற்கும், நிதி சமநிலையை மீட்டெடுப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Source link