அரையிறுதியில் இந்தியா: 'யூத்' உலக கோப்பை கிரிக்கெட்டில்

புலவாயோ: உலக கோப்பை (19 வயது) தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது. ‘சூப்பர்-6’ போட்டியில் 58 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

ஜிம்பாப்வே, நமீபியாவில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 16வது சீசன் நடக்கிறது. புலவாயோவில் நடந்த ‘சூப்பர்-6’ சுற்றுக்கான ‘குரூப்-2’ போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

இந்திய அணிக்கு வேதாந்த் திரிவேதி (68), கனிஷ்க் சவுகான் (35), வைபவ் சூர்யவன்ஷி (30), அம்ப்ரிஷ் (29) கைகொடுத்தனர். இந்திய அணி 49.5 ஓவரில் 252 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது.

சவாலான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு உஸ்மான் கான் (66), ஹம்சா (42), கேப்டன் பர்கான் யூசுப் (38) ஓரளவு கைகொடுத்தனர். பாகிஸ்தான் அணி 46.2 ஓவரில் 194 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் கிலான் படேல், ஆயுஷ் மத்ரே தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

‘சூப்பர்-6’ சுற்றின் முடிவில் ‘குரூப்-2’ பிரிவில் தலா 8 புள்ளிகளுடன் முதலிரண்டு இடம் பிடித்த இந்தியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. மூன்றாவது இடம் பிடித்த பாகிஸ்தான் (4 புள்ளி) வெளியேறியது.

Source link