சென்னை: தவெகவின் 3வது ஆண்டு விழாவில் அக்கட்சி தலைவர் விஜய் வேல்முருகன் பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்தார். இதனை கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர்.
நடிகர் விஜய் 2024ம் ஆண்டு பிப்ரவரி 2ல் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். இன்று அக்கட்சி 3ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தவெகவின் 3ம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. விழாவில் விஜய் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார்.
நடனமாடிய விஜய்
கட்சியின் கொள்கை தலைவருக்கு விஜய் மரியாதை செலுத்தினார். விழா மேடையில் விஜய் வேல்முருகன் பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்தார். இதனை பார்த்த கட்சி நிர்வாகிகள் கைத்தட்டியும், கோஷம் எழுப்பியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விஜய் நடனமாடிய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ஜனநாயக இலக்கு
முன்னதாக தவெகவின் 3ம் ஆண்டு தொடக்கத்தையொட்டி விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2026 சட்டசபை தேர்தல் களம், இதுவரை இல்லாத புதிய சூழலைச் சுமந்து நிற்கிறது. இதற்கு ஒரே காரணம் நமது அரசியல் வருகை மட்டுமே என எல்லோரும் சொல்கின்றனர். அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம். ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம்” என கூறியிருந்தார்.
