மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பைனலுக்கு பெலாரசின் சபலென்கா, கஜகஸ்தானின் ரிபாகினா முன்னேறினர்.
மெல்போர்னில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலகின் ‘நம்பர்-1’ பெலாரசின் அரினா சபலென்கா, 12வது இடத்தில் உள்ள உக்ரைனின் எலினா ஸ்விடோலினா மோதினர். முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றிய சபலென்கா, இரண்டாவது செட்டை 6-3 என வென்றார். ஒரு மணி நேரம், 16 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சபலென்கா 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் தொடர்ந்து 4வது முறையாக (2023-26) பைனலுக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் உலகின் ‘நம்பர்-5’ கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, 6வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா மோதினர். முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய ரிபாகினா, ‘டை பிரேக்கர்’ வரை நீடித்த 2வது செட்டை 7-6 என தன்வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 40 நிமிடம் நீடித்த போட்டியில் ரிபாகினா 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 2வது முறையாக (2023, 2026) பைனலுக்குள் நுழைந்தார்.
பைனலில் சபலென்கா, ரிபாகினா மோதுகின்றனர்.
சாதிப்பாரா ஜோகோவிச்
ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் (ஜன. 30) உலகின் ‘நம்பர்-2’ இத்தாலியின் ஜானிக் சின்னர், 4வது இடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மோதுகின்றனர். ஜோகோவிச் எழுச்சி கண்டால் 11வது முறையாக பைனலுக்கு தகுதி பெறலாம். தொடர்ச்சியாக 2 முறை (2024-25) கோப்பை வென்ற சின்னர் அசத்தினால் 3வது முறை பைனலுக்குள் நுழையலாம்.
மற்றொரு அரையிறுதியில் உலகின் ‘நம்பர்-1’ ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், 3வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மோதுகின்றனர்.
