புதுடில்லி : லோக்சபாவில் விவாத நேரத்தின் போது காங் எம்பி ராகுல் பேசுகையில், முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே எழுதிய வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள் காட்டியதற்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் லோக்சபாவில் கடுமையான வாக்குவாதங்கள் நடந்தன. அதன் விபரம் பின்வருமாறு:
ராகுல் பேசுகையில், ‘இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது. இது பற்றி, முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய சுயயசரிதை புத்தகத்தை வெளியிடுவதை மத்திய அரசு தடுத்துள்ளது’ என தெரிவித்தார்.ராகுல் பேசி கொண்டு இருந்த போது மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் குறுக்கீட்டு பேசினர்.
‘நரவானே எழுதிய சுயசரிதை புத்தகத்தில் உள்ளவற்றை அவையில் வாசிக்கக் கூடாது’ என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆட்சேபனையை ஆதரித்து, ராகுல் தனது கருத்துக்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட ஆதாரங்களுடன் மட்டுமே வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு ராகுல், ‘ஆதாரபூர்வமற்ற எதையும் அவையில் நான் குறிப்பிடவில்லை’ என தெரிவித்தார்.
ராகுலுக்கு ஆதரவு
பின்னர், ‘ராகுல் பேச்சில் ஏதாவது தவறு இருந்தால் ராஜ்நாத் சிங் பதில் அளிக்கலாம். ஆனால் தடுக்கக்கூடாது’ என காங்கிரஸ் எம்பி வேணுகோபால் தெரிவித்தார். ‘சீன ஆக்கிரமிப்பு பற்றி ராகுல் பேசும்போது ஏன் எதிர்க்கிறீர்கள்’ என ராகுலுக்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசினார்.
பாஜவினரும் காங்கிரஸ் கட்சியினரும் போட்டி முழக்கமிட்டதால் லோக்சபாவில் சலசலப்பு நிலவியது. ராகுலை பேசவிடாமல் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர்.
ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகள் கடும் அமளி காரணமாக லோக்சபா மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
