சந்தோஷ் டிராபி கால்பந்து: தமிழகம் 'டிரா'

சிலபதார்: தமிழகம், மேற்கு வங்கம் அணிகள் மோதிய சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டி 1-1 என ‘டிரா’ ஆனது.

இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், சந்தோஷ் டிராபி தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 79வது சீசன் நடக்கிறது. இதில் இறுதிச் சுற்றில் 12 அணிகள், இரு பிரிவுகளாக விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடம் பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

அசாமில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் தமிழகம், மேற்கு வங்கம் அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியின் 61வது நிமிடத்தில் தமிழக வீரர் நந்த குமார் ஆனந்தராஜ் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 81வது நிமிடத்தில் மேற்கு வங்கத்தின் சுஜித் சாது, ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என ‘டிரா’ ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

மற்ற ‘ஏ’ பிரிவு லீக் போட்டிகளில் அசாம் அணி 3-0 என, ராஜஸ்தானை வீழ்த்தியது. உத்தரகாண்ட் அணி 2-1 என, நாகலாந்தை வென்றது.

‘ஏ’ பிரிவில் இதுவரை விளையாடிய 4 போட்டியில், 2 வெற்றி, ஒரு ‘டிரா’, ஒரு தோல்வி என, 7 புள்ளிகளுடன் தமிழக அணி 2வது இடத்தில் நீடிக்கிறது. முதலிடத்தில் மேற்கு வங்கம் (10 புள்ளி) தொடர்கிறது. ராஜஸ்தான் (6), அசாம் (5) அணிகள் 3, 4வது இடத்தில் உள்ளன.

Source link