நிக்கல், லித்தியம் வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு சீனா அனுமதி

பெய்ஜிங்: சீனா, தன் உள்நாட்டு சந்தையில் நிக்கல், லித்தியம் கார்பனேட் சார்ந்த வர்த்தக ஒப்பந்தங்களில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இனி முதலீடு செய்யலாம் என அறிவித்து உள்ளது.

உலகளவில் மூலப்பொருட்களை அதிகளவில் வாங்கும் நாடாக சீனா இருந்த போதிலும், அவற்றின் விலை பெரும்பாலும், நிதி மையங்களான லண்டன், சிங்கப்பூர் மற்றும் நியூயார்க்கில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், நிக்கல், லித்தியம் கார்பனேட் உட்பட 14 பொருட்களுக்கான வர்த்தக ஒப்பந்தங்கள் திறந்து விடப்படுவதாக சீன பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பங்குச்சந்தைகள் இது தொடர்பான மாற்றங்களை நடைமுறைப்படுத்த, உரிய தயார்நிலையை மேற்கொள்ளுமாறு அந்த அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.

வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிப்பதன் வாயிலாக, கமாடிட்டி விலையை நிர்ணயம் செய்யும் சக்தியாக மாறுவதுடன் தன் கரன்சியான யுவானை, உலகளாவிய கரன்சியாக நிலைநிறுத்த சீனா முயற்சிக்கிறது.

தற்போது நிக்கல், ஷாங்காய் பங்குச்சந்தையிலும், லித்தியம் கார்பனேட் குவாங்க்சூ பங்குச்சந்தையிலும் வர்த்தகமாகி வருகின் றன. சீனாவில் ஏற்கனவே இவ்விரு கனிமங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள், அதிகளவில் வர்த்தகமாகி வருகின்றன.

மின்சார வாகனங்களுக்கான பேட்டரி, சோலார் பேட்டரி தயாரிப்பில் இவை முக்கிய பங்கு வகிப்பதால், உலகளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

சீனாவுக்கு கிடைப்பது நிக்கல், லித்தியம் கார்பனேட் வர்த்தக ஒப்பந்தத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால், விலை நிர்ணய அதிகாரம், வெளிநாட்டு முதலீடுகள், சந்தை விரிவாக்கம் ஆகிய வசதிகள் சீனாவுக்கு கிடைக்கும்.

Source link