வாஷிங்டன்: கால்பந்து அரங்கிலும் புகுந்து ‘விளையாடுகிறார்’ அமெரிக்க அதிபர் டிரம்ப். உலக கோப்பை கால்பந்து தொடர் (2026, ஜூன் 11-ஜூலை 19), அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் செனகல், ஐவரி கோஸ்ட் நாடுகளின் ரசிகர்கள் அமெரிக்கா வர ‘விசா’ கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஈரான், ஹைதி நாடுகளின் ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கால்பந்தில் அரசியலை புகுத்தும் டிரம்ப் நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ‘அமெரிக்காவில் நடக்கும் உலக கோப்பை போட்டிகளை புறக்கணிப்போம். அங்கு ரசிகர்கள் செல்லக்கூடாது. போட்டிகளை ‘டிவி’யில் பார்ப்போம்’ என்ற கோரிக்கைக்கு சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (பிபா) முன்னாள் தலைவர் செப் பிளாட்டர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
வேகம் வேகம்… போகும் துாரம்
லா கன்கா (இத்தாலி): ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் கார் பந்தயத்தில், ‘சிங்கப்பெண்ணாக’ சீறுகிறார் இந்தியாவின் இளம் அட்டிகா மிர், 11. காஷ்மீரை சேர்ந்த இவர், ‘பார்முலா-1’ பயிற்சி அகாடமிக்கு தேர்வான முதல் இந்திய வீராங்கனை. இத்தாலி, லா கன்காவில் நடந்த டபியுள்.எஸ்.கே., சூப்பர் மாஸ்டர் கார்ட் ரேசில், ஜூனியர் பிரிவில் பங்கேற்றார். தகுதிச் சுற்றில் (49.76 வினாடி) மின்னல் வேகத்தில் சென்ற இவர், 2வது இடம் பெற்று சாதித்தார். பைனலுக்கு முந்தைய சுற்றில் இவரது ‘கார்ட்’ தொழில்நுட்ப பிரச்னையால் ‘ஸ்டார்ட்’ ஆகவில்லை. இதனால் பைனலுக்கான பட்டியலில் 18வது இடத்திற்கு பின்தங்கினார். அட்டிகா மிர் கூறுகையில்,”அறிமுக வீராங்கனையாக தகுதிச் சுற்றில் 2வது இடம் பிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. பந்தயத்தின் போது, கார்ட்டில் பிரச்னை ஏற்படுவது சகஜம்,”என்றார்.
எக்ஸ்டிராஸ்
* கோல்கட்டாவில் நடந்த ‘டாடா ஸ்டீல்’ செஸ் தொடரில் பெண்களுக்கான ரேபிட் பிரிவில் இந்தியாவின் பிரிஸ்டி முகர்ஜீ (2022, 2024, 2026) மூன்றாவது முறையாக சாம்பியன் ஆனார். இவருக்கு ரூ. 20,000 பரிசு, கோப்பை கிடைத்தது.
* பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ருடுஜா, சீனாவின் ஜெங் ஜோடி 6-4, 6-3 என இந்தியாவின் வசந்தி, ருமேனியாவின் பிரியானா ஜோடியை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது.
* ஐதராபாத்தில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் விஷ்ணு வர்தன், மணிஷ் சுரேஷ்குமார் வெற்றி பெற்றனர்.
* தாய்லாந்தில் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சாய் பிரதீக், கிருஷ்ணமூர்த்தி ஜோடி 20-22, 20-22 என்ற நேர் செட்டில் மலேசியாவின் அஸ்ரின், டான் ஜோடியிடம் போராடி தோற்றது.
* ஆஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் 34. 25 ஒருநாள் (39 விக்.,), 36 ‘டி-20’ல் (45) பங்கேற்றுள்ளார். நேற்று தொழில்ரீதியிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
