மத்திய பட்ஜெட் 2026 – 27: தலைவர்கள் சொல்வது என்ன?

பாராமுக பட்ஜெட்

இளைஞர்கள் பலர் வேலையில்லாமல் உள்ளனர். உற்பத்தி துறை சரிந்து வருகிறது. முதலீட்டாளர்கள், முதலீடுகளை திரும்ப பெற்று வருகின்றனர். மிகப்பெரிய நெருக்கடியில் விவசாயிகள் உள்ளனர். இதில், எந்தவொரு விஷயமும் பட்ஜெட்டில் கண்டுகொள்ளப்படவில்லை. சரியான சீர்திருத்தங்களை மேற்கொள்ள தவறியதுடன், உண்மையான பிரச்னைகளுக்கு பாராமுகமாகவும் பட்ஜெட் அமைந்துள்ளது.

– ராகுல், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்.,

கட்டமைப்பு சீர்குலைவு

திக்கு தெரியாத அரசிடம் இருந்து வந்துள்ள வரைமுறையற்ற, இதயமற்ற பட்ஜெட் இது. மத்திய அரசு, தன் கண்களை திறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. வேலையின்மை பிரச்னை உச்சக்கட்டத்தில் உள்ளது. ஏற்ற இறக்கம் காணும் சந்தைகளால், நடுத்தர மக்களின் இதயத்தில் ரத்தம் கசிகிறது. இந்த பட்ஜெட் வாயிலாக, நலத்திட்டங்களுக்காக இருந்த கட்டமைப்பின் ஒவ்வொரு செங்கல்லும் பிடுங்கப்பட்டுள்ளது.

– வேணுகோபால், பொதுச்செயலர், காங்.,

தீர்வு வழங்கவில்லை

மோடி அரசிடம் யோசனைகள் தீர்ந்துவிட்டன. மத்திய பட்ஜெட்டில், நாட்டின் பல பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களுக்கு ஒரு தீர்வும் வழங்கப்படவில்லை. அர்த்தமுள்ள நலத்திட்ட ஆதரவு அல்லது வருமான பாதுகாப்பு திட்டத்துக்காக காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்து உள்ளனர். சீர்திருத்த எக்ஸ்பிரஸ். எந்த சீர்திருத்த முனையத்திலும் நிற்பது இல்லை.

– மல்லிகார்ஜுன கார்கே, தலைவர், காங்.,

சீர்திருத்த எக்ஸ்பிரஸ்

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய ‘சீர்திருத்த எக்ஸ்பிரஸ்’ ரயிலாக பட்ஜெட் உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து சாமானிய மக்களுக்கான அறிவிப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன. வளர்ச்சியும், மேம்பாடும்தான் இந்த பட்ஜெட்டின் முக்கிய நோக்கம். அரசியல் காரணங்களுக்காகவே எதிர்க்கட்சியினர் இந்த பட்ஜெட்டை விமர்சிக்கின்றனர்.

– கிரண் ரிஜிஜு,மத்திய அமைச்சர், பா.ஜ.,

மக்கள் விரோதம்!

மத்திய அரசின் பட்ஜெட் திசையற்றது; தொலைநோக்கு பார்வை இல்லாதது; செயலற்றது மற்றும் மக்கள் விரோதமானது. இது, பெண்களுக்கும், விவசாயிகளுக்கும், கல்விக்கும், பல்வேறு சமூகங்களுக்கும் எதிரானது. இந்த பட்ஜெட்டில் மேற்கு வங்கத்துக்கு எதுவும் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்ததே இதற்கு சாட்சி.

– மம்தா பானர்ஜி,மே.வங்க முதல்வர், திரிணமுல்

தொலைநோக்கு பார்வை!

மத்திய பட்ஜெட், ‘வளர்ச்சியடைந்த பாரதம் 2047’ என்ற இலக்கை நோக்கிய இந்தியாவின் பயணத்தில், உள்கட்டமைப்புக்கு மிக முக்கிய இடத்தை அளித்துள்ளது. இதில், அறிவிக்கப்பட்ட முன்முயற்சிகள் ஒரு தெளிவான தொலைநோக்கு பார்வையை பிரதிபலிக்கின்றன. விவசாயிகள், இளைஞர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மையமாக கொண்ட ஒரு உறுதியான செயல்திட்டத்தை பட்ஜெட் கோடிட்டு காட்டுகிறது.

– நிதின் கட்கரி,மத்திய அமைச்சர், பா.ஜ.,

தடம்புரண்ட சீர்திருத்த ரயில்!

விவசாயிகளுக்கோ, வேலையில்லா இளைஞர்களுக்கோ, தொழிலாளர்களுக்கோ, பட்டியல் சாதியினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என யாருக்கும் இந்த பட்ஜெட்டால் எந்த பயனும் இல்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை. சீர்திருத்த விரைவு ரயில், நிலையத்தை விட்டு புறப்படுவதற்கு முன்பே தடம் புரண்டுவிட்டது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

– ரன்தீப் சுர்ஜேவாலா, பொதுச் செயலர், காங்கிரஸ்

மந்தமான பட்ஜெட்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய பட்ஜெட் உரை வெளிப்படைத்தன்மையற்றதாக இருந்தது. முக்கிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை. ஒன்றரை மணி நேரம் பேசியிருந்தாலும், மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த பட்ஜெட் உரை முற்றிலும் மந்தமாகவே இருந்தது.

– ஜெய்ராம் ரமேஷ்,பொதுச் செயலர், காங்கிரஸ்

Source link