பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை; மனித உரிமை அமைப்பு கவலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடர்ந்து நீடித்து வரும் வன்முறை மற்றும் பதற்றமான சூழல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு ஆழந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், சட்டசபையில் அகதிகளுக்கான இட ஒதுக்கீடு, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் கடந்த மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டங்களில் பலர் உயிரிழந்துள்ளனர்.

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வரும் 27ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அங்கு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா., மனித உரிமை ஆணையர் போல்கர் டர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதியை நிலைநாட்ட அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இந்த வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்த அனைவரின் மரணம் குறித்தும், எவ்வித பாரபட்சமும் இன்றி, உடனடியாகவும் முழுமையாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அப்பகுதியில் நிலவி வரும் பதற்றத்தை கட்டுப்படுத்த இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளதற்கும் போல்கர் டர்க் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Source link