டெல்லியைச் சேர்ந்தவர் பிரியங்கா (23) எனும் இளம் பெண் தனது புதிய முயற்சியால் அதிக வருமானத்தை ஈட்டி வருவது பேசுபொருளாக மாறியுள்ளது. 12 வகுப்பு முடித்த இவர் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அங்கு, தினமும் 12 மணி நேரம் வேலை செய்த போதிலும் அவருக்கு 15 முதல் 20 ஆயிரம் வரையில் மட்டுமே வருமானம் கிடைத்தது. மேலும், அந்த பணியில் விடுமுறை எடுப்பதும் சிக்கலான விஷயமாக இருந்தது.
இதையடுத்து, அவர் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ஆன்-டிமாண்ட் என்ற வீட்டுச் சேவை செயலியில் தன்னை இணைத்துக் கொண்டார். இதன் மூலமாகக் கிடைக்கும் வேலையை அவர் செய்து வருகிறார். அந்த செயலியின் மூலம் தற்போது குறைவான நேரத்தில் நிறைவான வருமானத்தை ஈட்டி வருகிறார். தற்போது அவர் மாதம் ரூ 35 ஆயிரம் வரை சம்பாதித்து வருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், ” இந்த செயலியின் மூலமாக வேலை செய்வதால் முறையான வருமானம் கிடைக்கிறது. முன் பதிவு இல்லாத நாளிலும் வேலை கிடைக்கிறது. இதனால் ஒவ்வொரு நாளும் ரூ.900 வரை நிலையான வருமானம் கிடைக்கிறது. வார இறுதி நாட்களில் ரூ.1000 க்கும் அதிகமான ஊதியம் கிடைக்கிறது. தேவைப்படும் போது விடுமுறை எடுக்கும் சுதந்திரமும் இதில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இணைய தள வசதிகள் மூலம் பல்வேறு வேலை வாய்ப்புகள் பெற முடியும் என்பதை இப்பெண் நிரூபித்துள்ளார். தற்போது அவர் அந்த செயலி சார்ந்த வீட்டுச் சேவைத் தளத்தின் மூலம், வீட்டைச் சுத்தம் செய்தல், பாத்திரம் கழுவுதல் மற்றும் பிற வீட்டு வேலைகளைச் செய்து வருகிறார். அவரது வருமானம் அதிகரித்திருந்தாலும், வேலையில் தனக்குக் கிடைத்துள்ள சுதந்திரமும் மரியாதையுமே மிக முக்கியமானது என்று அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.
